சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை


சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் இணைந்து, திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு இடங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமிழக போதைப் பொருள்தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி,ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் கர்ணன், ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் போதைபொருள் தடுப்பு பிரிவு போலீஸார், சென்ட்ரல் ரயில்வே போலீஸார், ஆர்.பி.எஃப் போலீஸார் ஆகியோர் இணைந்து போதைப்பொருள் தொடர்பாக அதிரடி சோதனையில் நேற்று காலை ஈடுபட்டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து சென்ட்ரலுக்கு வந்தடைந்த ரயில் மற்றும் நிலையத்தின் நடைமேடை, காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்த பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் ஆகியவற்றை மோப்பநாய் உதவியுடன் போலீஸார் சோதனை செய்தனர். பின்னர், நிருபர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி கூறியதாவது:

வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் போதைப் பொருட்களை தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் மாவட்டஎல்லைகள், மாநில எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் தமிழக காவல்துறை மற்றும் போதைப்பொருள்தடுப்பு போலீஸார் இணைந்து,அனைத்து இடங்களிலும் சோதனைவழக்கம்போல நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக, போதைஇல்லா தமிழகத்தை உருவாக்கதொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஓடும் பேருந்து மற்றும் ரயில்களில் அதிக அளவில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதால், போதைப்பொருள் தடுப்புபிரிவு போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, தமிழகத்தின் தலைநகராக இருக்கும் சென்னையில் போதைப் பொருள் கடத்தப்படும் இடத்தை `பிளாக் ஸ்பாட்' ஆககண்காணித்து வருகிறோம்.

மேலும், அதிக அளவில் வழக்குகள் பதியப்படுகின்றன. போதைப்பொருள் உபயோகிப்பதை தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தொடந்துவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொது மக்கள் `10581'என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

x