கும்மிடிப்பூண்டி அருகே இருதரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை: சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில் மீண்டும் திறப்பு


திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடுவில் ‘சீல்’ வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில் 37 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி. ஸ்ரீ னிவாச பெருமாள் முன்னிலையில் பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடுவில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் ‘சீல்’ வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில் 37 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முன்னிலையில் பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள எட்டியம்மன் கோயிலில் கடந்த ஆக. 9-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து, காலை வேளையில் மாற்று சமூகத்தினர் கோயிலில் வழிபாடு செய்தனர். மதிய வேளையில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலை நோக்கி சென்றனர்.

அப்போது, அவர்களை, ‘கோயிலுக்கு செல்லும் வழி பட்டா நிலத்தில் இருப்பதால் நீங்கள் மாற்று வழியில் செல்லுங்கள்’ என, கூறி மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பிரிவினருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, பட்டியலின மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆகவே, விபரீதம் ஏதும் நிகழாமல் தடுக்க ஏதுவாக, வருவாய்த் துறை அதிகாரிகள் எட்டியம்மன் கோயிலுக்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனர். இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக, கடந்த 12-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு பிரிவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், “கோயிலுக்கு செல்லும் பாதைக்கான நிலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலம் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட இடத்தை பொதுபாதையாக பயன்படுத்த வேண்டும்” என, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

இதையடுத்து, இரு தரப்பினரும் கோயிலை திறந்து, சுமூகமாக வழிபாடு நடத்த ஒப்புதல் தெரிவித்தனர். ஆகவே, வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ 37 நாட்களுக்குப் பிறகு நேற்று வருவாய்த் துறையினரால் அகற்றப்பட்டு கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து, கோயிலுக்கு ஊர்வலமாக வந்த 200-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கோயிலுக்குள் அழைத்து சென்றார். பிறகு, எட்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

அப்போது, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி. னிவாச பெருமாள் முன்னிலையில் பட்டியலின மக்கள் நெகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வுகளில், பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த், இந்து சமய அறநிலைத் துறை துணை ஆணையர் சித்ராதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை முன்னிட்டு, வழுதலம்பேடுவில் 250-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

x