திமுக - விசிக உறவில் விரிசலும் இல்லை, நெருடலும் இல்லை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு திருமாவளவன் விளக்கம்


சென்னை: திமுக - விசிக உறவில் விரிசலும் இல்லை, நெருடலும் இல்லை என்று தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், மது ஒழிப்பில் உறுதியாக இருப்பவர்கள் எங்கள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், அக்.2-ம் தேதி மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், விசிக தலைவர் திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில், ஆட்சியில் பங்கு கோருவது தொடர்பாக அவர் பேசிய வீடியோ சில தினங்கள் முன்னதாக வெளியாகி வைரலானது.

இந்நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திருமாவளவன் சந்தித்தார். அப்போது, திருமாவளவன் முதல்வரிடம் மனு ஒன்றை அளித்தார். 20 நிமிட சந்திப்பு முடிந்து வெளியில் வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பியுள்ள முதல்வர்ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தோம். 2 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம். தமிழகத்தில் உள்ள அரசு மதுக்கடைகளில் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும். அரசமைப்பு சட்டம் 47-ன்படி நாடு முழுவதும் மதுவிலக்கை படிப்படியாக கொண்டுவர அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பது கோரிக்கைகளாகும். இதுபற்றி, முதல்வர் ஸ்டாலினும் மத்தியஅரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

நாங்கள் வழங்கிய மனுவை படித்து பார்த்த முதல்வர், 'திமுகவின் கொள்கையும் மதுவிலக்குதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அக்.2-ம் தேதி மது ஒழிப்புமாநாட்டில் திமுக சார்பில் அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்பங்கேற்பார்கள்' என உறுதியளித்தார். 'மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைக்கு வருவதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை.நிர்வாக சிக்கலை கருத்தில் கொண்டு படிப்படியாக எவ்வாறுஅதனை நடைமுறைப்படுத்த முடியுமோ அவ்வாறு செயல்படுத்துவோம்' என்று முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:

ஆட்சி, அதிகாரத்தில் பங்குகுறித்து முதல்வரிடம் பேசினீர்களா?

அதுபற்றி பேசவில்லை. அது எங்கள் கருத்து அவ்வளவுதான். 1999-ல் இருந்து பேசிவரும் கருத்து சமூக வலைதளங்களில் பெரிதாக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம். எந்த நேரத்தில் எந்த கருத்து, கொள்கை, நிலைப்பாட்டை வலுவாக பேச வேண்டுமோ, அந்த நேரத்தில் பேசுவோம்.

மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு அதிமுகவைநேரில் அழைப்பீர்களா?

நாங்கள் திமுகவுக்கும் நேரில் அழைப்பு கொடுக்கவில்லை. பேசப்பட்ட விவரங்களில் இருந்து,திமுக தரப்பில் இருவர் பங்கேற்பார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். எங்கள் கருத்தில் உடன்படுகிறவர்கள் எங்கள் மாநாட்டில்பங்கேற்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும், தயக்கமும் இல்லை.

திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக, பாஜக கூறிவருவது குறித்து?

திமுக, விசிக கட்சிகள் உறவில்விரிசலும் இல்லை, நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கைநிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

மது ஒழிப்பு மாநாட்டுக்கு நேரில் அழைத்தால், பரிசீலிப்பதாக கட்சிகள் கூறுவது பற்றி?

இது ஒரு கட்சிக்கான, கூட்டணிக்கான பிரச்சினை இல்லை. மக்கள் பிரச்சினை. யாரெல்லாம் மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இதை தேர்தலோடு முடிச்சு போட வேண்டாம்.

தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படுமா?

மூடப்படும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்

x