காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் 4-வது உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்களின் மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா இன்றைய நாளுக்காக மட்டும் தயாராகி வரவில்லை. அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தேவையானவற்றை கருத்தில் கொண்டு தயாராகி வருகிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டுமானால் எரிசக்தி தேவையின் முக்கியத்துவத்தை இந்தியா நன்கு அறிந்துள்ளது. எனவே, எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன்படி, சூரிய மின்சக்தி, காற்றாலை, நீர்மின் சக்தி, அணுமின் சக்தி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளோம். இந்தியாவில் எண்ணெய், எரிவாயு போன்வற்றுக்கு பற்றாக்குறை உள்ளது. அதற்காகவே மற்ற விதங்களில் எரிசக்தி உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை (பி.எம். சூர்ய கர் பிரீ எலக்ட்ரிசிட்டி ஸ்கீம்) மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மின்சார நுகர்வோர்கள் ஒவ்வொருவரும், மின்சார உற்பத்தியாளர்களாக மாற முடியும்.
பிரதம மந்திரியின் சூரிய வீடுஇலவச மின்சாரத் திட்டம் வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாக வும் உள்ளது. ஒவ்வொரு 3 கிலோ வாட் சூரிய சக்தி உற்பத்தி செய்வதன் மூலம், 50 முதல் 60 டன் கார்பன் டைஆக்ஸைடு வெளியேறுவது தடுக்கப்படும். பருவ நிலை மாற்றத்தை தடுக்க ஒவ்வொரு குடும்பமும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். அதற்காக அயோத்தியை முழுசூரிய சக்தி நகரமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோல் நாடு முழுவதும் 17 நகரங்களை சூரியமின் சக்தி மயமாக்க அடையாளம் கண்டுள்ளோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் இந்தியா மிகவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் அணுசக்தி மூலம் 35 சதவீதம்கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வரும் 2070-ம் ஆண்டுக்குள் புகை வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.
உலக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்களின் மாநாடு,எதிர்காலத்தையும் தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் இருக்கும். இதன்மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள், இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்