மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார யுத்திகள் பரபரப்பைக் கிளப்ப துவங்கியிருக்கும் நிலையில், கோவை மாநகரில் மத்திய அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டும், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் விதமாகவும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய பாஜக அரசை விமர்சித்து திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ’சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கியாரண்டி’ என தலைப்பிட்டு, வடிவேலுவின் கார்ட்டூன் படத்துடன் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை வெள்ள நிவாரண நிதி வழங்காததை விமர்சித்தும், பாஜக நிறைவேற்றாத வாக்குறுதிகளை வடை எனவும் விமர்சித்து இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளாது. அதேபோல் தற்போது கோவையில் பாஜகவினர் திமுக ஆட்சியை குடும்ப ஆட்சி என விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், ’ஆமா குடும்ப ஆட்சி தான். தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆட்சி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் நான் முதல்வன், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள மகள், மகன், அம்மா உள்ளிட்டோருக்கு தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது புதிது அல்ல. கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் உள்ள சுவர்களில் அரசியல் கட்சிகள் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்த போஸ்டர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, தற்காலிகமாக தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.