மதுரை: "மற்ற கட்சிகளை விமர்சிக்கும் முன்பு திருமாவளவன் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மேலூர் பேருந்து நிலையம் மற்றும் நொண்டி கோவில்பட்டி பகுதிகளில் புதிய உறுப்பினர் முகாமை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "திருமாவளவன் சாதி அமைப்புகள், மத அமைப்புகள் என மற்றவர்களை குறை சொல்வதற்கு முன்பு, அவர் என்ன அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை யோசித்த பேச வேண்டும்.
திருமாவளவன் ஒட்டுமொத்த தலித் சமுதாய மக்களுக்கு அல்லது தமிழக மக்களுக்காகவா கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார். குறிப்பிட்ட சாதியின் கட்சித் தலைவராக திருமாவளவன் இருந்து கொண்டிருக்கிறார். தன்னை சுய பரிசோதனை செய்து கொண்டு சொன்னால் சரியாக இருக்கும்" என்று எல்.முருகன் கூறினார்.
அதேபோல், விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தொல்.திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது நாடகம். நாங்கள் ஆட்சியில் உள்ள குஜராத்திலும், கூட்டணி ஆட்சி உள்ள பிஹாரிலும் மதுவிலக்கை கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. ஆனால், திமுக அதை செய்யாது. டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் ஏராளமான தனியார் பார்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். நாடகமாடுவதை நிறுத்த வேண்டும்” என்றார்.