மதுரை: கப்பலூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்ட மனித நேய மக்கள் கட்சியினர் கைது


படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கட்டணக் கொள்ளையை கண்டித்தும், வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்ட மனித நேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 கி.மீ தொலை தூரத்துக்குள் ஒரு சுங்கச்சாவடி என்ற விதிமுறையை மீறி செயல்படும் மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை செய்தும் தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து மனித நேய மக்கள் கடசியின் தெற்கு மாவட்டம் சார்பில், சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதன்படி, மாலை 3 மணிக்கு கப்பலூர் சுங்கச்சாடியில் பகுதியில் தமுமுக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.மைதீன் சேட் கான் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். சுமார் 4.30 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சுங்கச்சாவடி அருகே மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென சுங்கச்சாவடியை சுற்றி முற்றுகையிட்டனர். காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அருகிலுள்ள தனியார் மஹாலில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தால் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மைதீன் சேட் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மனித நேய மக்கள் சார்பில் 7 இடங்களில் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடந்தது. கடந்த மாத முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 17 சதவீதம் கட்டணம் உயர்த்தியுள்ளனர். இக்கட்டணத்தை திரும்ப பெறக்கோரி ஜனநாயக முறைப்படி இப்போராட்டம் நடத்துகிறோம். உயர்த்திய கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். இச்சுங்கச்சாவடி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லை எனில் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும்.

குஜராத்தில் சுங்கச்சாவடிகளே கிடையாது. தமிழகத்தில் மட்டும் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கவே சுங்கச்சாவடிகளை ஏற்படுத்து கின்றனர். கேரளாவில் 5, மகாராஷ்டிராவில் 44 மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. அடுத்த முறை பிற கட்சிகளுடன் சேர்த்து போராடுவோம். முதல்வர் சிறப்பாக தமிழகத்தை வழிநடத்துகிறார். எவ்வித புதிய திட்டமும் இன்றி வரியை மட்டுமே வைத்து மத்திய அரசு செயல்படுகிறது” என்று மைதீன் சேட் கான் கூறினார்.

போராட்டம் காரணமாக சுங்கச்சாவடி பகுதியில் சாலையின் இருபுறத்திலும், நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. திருமங்கலம்- மதுரை சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.

x