24 மணி நேரமும் இயங்கப் போகும் மதுரை விமான நிலையம் - தீவிரம் காட்டும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்


மதுரை: மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளதால் அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அடுத்த மாதம் சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடத்த மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை - சென்னை இடையே 475 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் விமானத்தின் மூலம் பயணித்து விட முடிகிறது என்பதால் கார்களில் ரயில்களில் செல்வதை விட விமான பயணங்களையே மக்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், அரசியல் வாதிகள் பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால், உள்நாட்டு விமான போக்குவரத்திலேயே மதுரை - சென்னை - மதுரை வழித் தடத்தில் தான் மிக அதிக அளவிலான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

அப்படி இருந்தும், கடந்த 2023-ம் ஆண்டில் 12,89,621 பயணிகளை மதுரை விமான நிலையம் கையாண்டுள்ளது. இதில், 10,69,274 பேர் உள்நாட்டு பயணம் மேற்கொண்ட பயணிகள், 2,20,347 பேர் சர்வதேச பயணம் மேற்கொண்ட பயணிகள். அதனால், மதுரை விமானநிலையத்தை சர்வதேச அந்தஸ்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய விமான நிலையமாக மாற்ற தென் மாவட்ட தொழில் முனைவோர்கள், மக்கள் பிரதிநிதிகள் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட உள்ளதால் அடுத்த மாதம் அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடத்த மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது; தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை விமான நிலைய மேம்பாட்டிற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே விமான நிலைய விரிவாக்கம் மற்றும் புதிய முனையக்கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி மதுரைக்கு வருகை புரிந்த பிரதமரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் சந்தித்தோம்.

அப்போது சுமார் பத்து நிமிடங்கள் பிரதமருடன் விவாதித்து மதுரை விமான நிலையம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். தேர்தல் முடிந்து மீண்டும் பதவியேற்ற பின்பு இவையெல்லாம் கவனிக்கபடும் என்று பிரதமர் உறுதியளித்தார். அதன்படி உடனடி பலன் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மதுரை விமான நிலையம் வரும் அக்டோபர் 29-ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், மதுரை விமான நிலையத்திலிருந்து இரவு நேர சேவையை வழங்க இருக்கும் விமான நிறுவனங்களிடம் அறிக்கை கேட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்ய மதுரையிலிருந்து இரவு நேர விமான சேவை இல்லாததால் திருச்சி, சென்னை விமான நிலையங்களை நாடவேண்டிய சூழல் உள்ள நிலையில், இனி இரவு நேர சேவையுடன் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இருப்பது மகிழ்ச்சியான செய்தி. இது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் பிரதமரிடம் வைத்த வேண்டுகோளுக்கு கிடைத்த வெற்றி என்றால் அது மிகையல்ல.

இனி மதுரை விமான நிலையத்திலிருந்து புதிய வெளிநாட்டு சேவைகளும் உள்நாட்டு சேவைகளும் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உருவாகும். மதுரை விமான நிலையம் இனி 24 மணி நேரமும் செயல்படக்ச்கூடிய விமான நிலையமாக மாற இருப்பதால், மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவையைத் தொடங்க ஆர்வமாக இருக்கும் தனியார் விமான நிறுவனங்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பேசுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து வரும் அக்டோபர் மாதம் சென்னையில் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மதுரையிலிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுவதற்கு மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் மதுரை, விருதுநகர் தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும்" என்று ஜெகதீசன் கூறியுள்ளார்.

x