நீட் தேர்வு என்ற வார்த்தை கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் எப்போதும் கொதிநிலையை ஏற்படுத்தவல்லதாக இருக்கிறது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது முதலே அது தமிழ்நாட்டில் எதிர்ப்புக்குரியதாகவே இருந்து வருகிறது.
அதிமுகவும், திமுகவும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையை வெளிக்காட்டி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களும், மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களாக இருப்பதால் நீட் தேர்வு தமிழக அரசியலில் அவ்வபோது பெரும் சர்ச்சைகளையும், பரபரப்பையும் உருவாக்கும் சக்தியாக திகழ்ந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடக்கும் காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும். அப்போதெல்லாம் அறிக்கைகள் தூள் பறக்கும்; போராட்டங்கள் நடக்கும். அப்புறம் அடுத்த ஆண்டுவரை அப்படியே ஓய்ந்து கிடக்கும். ஆனால் இந்த ஆண்டு, மருத்துவச்சேர்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியின், “நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போடமாட்டேன்” என்ற பேச்சால், தமிழகத்தில் மீண்டும் நீட் தேர்வு குறித்த போராட்டச்சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆளுநரின் பேச்சுக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறது ஆளும் திமுக. மதுரை அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு ரத்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்படாதது கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
”திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று முன்பு சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் முடிந்து விட்ட நிலையில் தற்போது, ” இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்” என்கிறார். நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என்றாலும் அதற்கான முன்னெடுப்புக்களை செய்ய திமுக அரசு தவறவில்லை. சட்டமன்றத்தில் நீட்தேர்வுக்கு எதிராக இரண்டு முறை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கச் சொல்லி ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்தது. பிரதமரை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தது என தொடர்ந்து செயலாற்றி வருகிறது திமுக.
இந்நிலையில், இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்தை கடந்த மே மாதம் ஐந்தாம் தேதியன்று குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். ஆனால். அதனால் பயன் கிடைக்கும் என்று யாரும் நம்பவில்லை. ஏனென்றால், நீட் விலக்குக்காக 2017-ம் ஆண்டு அதிமுக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்துவிட்டார். எனவே, தற்போதைய திமுக அரசின் தீர்மானத்தை மட்டும் அவர் ஏற்றுக் கொள்வார் என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
இந்நிலையில், நீட் தேர்வை தமிழக அரசால் ரத்து செய்யமுடியுமா... அல்லது எதிர்க்கட்சிகள் சொல்வது போல முடியாது என்று தெரிந்தும் திமுக வெறுமனே அரசியலுக்காக செயல்பட்டு வருகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
கல்வியாளர்கள் தரப்பிலோ நீட் தேர்வை நிறுத்துவதற்கு இனி வாய்ப்பில்லை என்கிறார்கள். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிவித்து விட்டதால், இனிமேல் நீட் தேர்வை நிறுத்த வாய்ப்பில்லை.
எனினும், சில தலைவர்கள் போலியாகவும், சுயலாபத்திற்காகவும் வாக்குறுதிகளை கொடுக்கின்றனர். 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களை கொண்ட இந்தியா போன்ற பெரிய நாட்டில், பல்வேறு வாரியத்தின் கீழ் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு படிப்பில் சேர்வதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தரத்தை உறுதி செய்து, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில், பொதுவான ஒருங்கிணைந்த வலிமையான நுழைவுத்தேர்வு கட்டாயமாகிறது. இத்தேர்வு வாயிலாக, நாட்டின் எந்தப் பகுதியிலும், எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேரும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கும். இதனால், மாநில அரசின் இடஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணமாக இருக்கலாம். அது தமிழக மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கலாம். ஆனால், சட்டரீதியாக நீட் தேர்வை தடை செய்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.
மாநில அரசால் மத்திய அரசின் சட்டங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரமுடியும். ஆனால், அதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் தேவை. அதாவது மத்திய அரசின் ஆதரவு தேவை. தற்போதைய மத்திய அரசிடம் திமுக அரசு தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வரும் நிலையில் திமுகவின் தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை. அதை இங்குள்ள அண்ணாமலை தொடங்கி மத்திய அமைச்சர்கள் வரை அடிக்கடி வழிமொழிந்துவிட்டார்கள்.
திமுகவின் இந்த ஆர்ப்பாட்டம், போராட்டமெல்லாம் அதிகபட்சம் நாங்கள் போராடினோம், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம். ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம், பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம் என்றெல்லாம் பொதுவெளியில் சொல்லிக்கொள்ளத்தான் உதவுமே தவிர, அவ்வளவு எளிதாக நீட் தேர்வை ரத்து செய்துவிட திமுகவாலும் திமுக அரசாலும் இயலாது என்கிறார்கள் சட்டம் தெரிந்தவர்கள்.
மேலும், பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம் என்றும் திமுக அறிவித்துள்ளது. அப்படி நடந்தால் மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். ஆனால், பல மாநில அரசுகளின் ஆதரவைப்பெற்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே இதுவும் நடக்க சாத்தியம். தற்போதைய சூழ்நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை என்கிறார்கள்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறமுடியாது என்று சொல்லப்படும் நிலையில் திமுக, அரசியலுக்காகத் தான் இதை கையாண்டு வருகிறதா? என்று திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சரவணனிடம் பேசினோம்.
”இந்திய அரசியல் சட்டத்தின் 254 பிரிவு மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களிலிருந்து மாநில அரசு விலக்கு பெற முடியும் என்பது தெளிவாக சொல்கிறது. அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் பல மாநில அரசுகள் மத்திய அரசின் சட்டங்களில் இருந்து விலக்கு பெற்றுள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்விலிருந்து அப்படி விலக்குப் பெறப்பட்டுள்ளது.
அதனால் நீட்டுக்கு விலக்கு பெறமுடியாது என்று சொல்வது தவறான பிரச்சாரம். அது பாஜக செய்யும் மலிவான அரசியல். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம், ஜல்லிக்கட்டு மசோதா போன்றவற்றில் முடிந்தது இதில் முடியாதா? நிச்சயமாக நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெறும்.
இந்த விவகாரத்தில் பாஜக தான் அரசியல் செய்கிறதே தவிர, திமுக அரசியல் செய்யவில்லை. குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தெரிவித்து விட்டால் தமிழ்நாட்டில் அடுத்த நொடியே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு விடும்” என்று உறுதியாகச் சொன்னார் சரவணன்.
நீட் தேர்வு விஷயத்தில் மாநில அரசால் பெரிதாக எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து தான் கடந்த அதிமுக அரசில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது நல்ல ஆரோக்கியமான முடிவு. அதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் நானூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவப் படிப்பில் சேர முடிகிறது. எனவே வெறுமனே நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்றே சொல்லிக் கொண்டிருக்காமல் அது நடக்கும் வரை, வேறு வகையில் சிந்தித்து மருத்துவ இடங்களை நம் மாணவர்களுக்கு கையளிக்க தமிழக அரசு முயலவேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!