சட்டமன்றம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என எல்லா இடங்களிலும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என நிரூபித்து வரும் ஈபிஎஸ், மதுரையில் நடத்திக் காட்டிய ‘அதிமுக பொன்விழா வீர வரலாற்று எழுச்சி மாநாடு’ மூலம் கட்சியின் முழு தொண்டர்கள் பலமும் தன் பக்கமே என கெத்தாக எடுத்துக் காட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில் முதலாவது தர்மயுத்தம் நடத்த காரணமாக இருந்தவர்களுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இரண்டாவது தர்மயுத்தத்தை(?) நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் இனி என்ன செய்யப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவின் அதிகார தலைமையுடன் ஆட்சி தலைமையையும் முழுமையாக கைப்பற்ற நினைத்தார் சசிகலா. அதற்காக அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட எம்எல்ஏ-க்களை எல்லாம் கூவத்தூர் கொட்டடியில் அடைத்து வைத்து ஆதரவு திரட்டி வந்தார்.
இதன் நடுவே, ஆட்சிப் பொறுப்பை விட்டுத்தர மறுத்த ஓபிஎஸ், தன்னை அவமானப்படுத்திய சசிகலா தரப்பை அம்பலப்படுத்த திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் துவக்கினார். இதனிடையே ஆட்சி கட்டிலில் அமர நினைத்த சசிகலா, சிறைச்சாலைக்கு செல்ல நேர்ந்ததால் அவரது எண்ணம் நிறைவேறாமலே போனது.
அதனால் ஈபிஎஸ்ஸை தனது ஆசிர்வாதத்துடன் முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தார் சசிகலா. இதில் முரண்பட்ட டிடிவி தினகரனும் ஈபிஎஸ்ஸுக்கு எதிராகத் திரும்பினார். இதனால் அதிமுக அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவானது. இதையடுத்து ஓபிஎஸ்ஸை சரிக்கட்டி அழைத்து வந்த ஈபிஎஸ், அவருக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியையும் கொடுத்து முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
ஆனாலும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையிலான பனிப்போர் இலை மறை காயாக தொடர்ந்தது. பாராளுமன்ற தேர்தலின் போதும் இந்த பனிப்போர் பட்டவர்த்தனமாக தெரிந்தது. அந்தத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் மட்டுமே வென்று அதிமுக படுதோல்வி கண்டதால் ஓபிஎஸ் கெத்துகாட்ட ஆரம்பித்தார். இதைவைத்து டெல்லியில் பாஜக தலைவர்களுடன் தனி லாபியும் செய்தார்.
இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியது. ஆனாலும் கொங்கு மண்டலத்தில் அக்கட்சி வெற்றிக்கொடி நாட்டியது. இதன்மூலம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மீண்டும் யுத்தம் தொடங்கியது. கடைசியில் அந்தப் பதவியையும் சேதாரமின்றி கைப்பற்றினார் ஈபிஎஸ். அடுத்ததாக, ஒற்றைத் தலைமை விவகாரத்தை கையில் எடுத்தார் ஈபிஎஸ். இதைக் கடுமையாக எதிர்த்தார் ஓபிஎஸ். இதனால் கட்சி மீண்டும் ரெண்டுபட்டது.
இதையடுத்து, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முடிவெடுக்க கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டினார் ஈபிஎஸ். இதில் வேண்டா வெறுப்பாக பங்கேற்ற ஓபிஎஸ்ஸை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மேடையில் வைத்தே அவமானப்படுத்தினர். இதனால் பாதியிலேயே பொதுக்குழுவைவிட்டு வெளியேறினார் ஓபிஎஸ்.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழு தொடர்பாக இருதரப்பினரும் நீதிமன்றத்திற்குச் சென்றனர்.இந்த வழக்கின் தேர்தல் ஆணையத்தின் முடிவைக் கேட்டது உச்ச நீதிமன்றம். ஆணையம் ஈபிஎஸ் தரப்பை அங்கீகரித்ததால் ஓபிஎஸ் தரப்பு அப்செட் ஆனது. உச்ச நீதிமன்றமும் பொதுக்குழுவை அங்கிகரித்தது.
இந்த நகர்வுகளுக்கு நடுவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் ஈபிஎஸ்ஸுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர் மத்தியில் ஓபிஎஸ்ஸுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. இதனால் தென்மாவட்ட அதிமுகவில் அவருக்கு செல்வாக்கு இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது.
இதைப் பொய்யாக்கவும் ஒட்டுமொத்த அதிமுகவும் தன் பக்கம் தான் உள்ளது என்பதைக் காட்டவும் அதிமுக பொன்விழா வீர வரலாற்று எழுச்சி மாநாட்டை மதுரையில் கூட்டினார் ஈபிஎஸ். ஓபிஎஸ் தரப்பினரின் கண்டன போஸ்டர்கள், போராட்டம் உள்ளிட்ட அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மாநாட்டை செவ்வனே நடத்தி முடித்திருக்கிறார் ஈபிஎஸ்.
மதுரையில் மாநாடு நடந்தாலும் கொங்கு மண்டல தலைவர்களின் கட்டுப்பாட்டிலேயே அனைத்து நிகழ்வுகளும் அரங்கேறியது. கலை நிகழ்ச்சிகள் துவங்கி கட்சியின் தீர்மானம் வரை இதற்கு சான்றாக இருந்தது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயரைக்கூட எடப்பாடி இந்த மாநாட்டில் குறிப்பிடவில்லை. ஆனாலும் சலசலப்பு ஏதுமின்றி சக்சஸாகவே மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் ஈபிஎஸ்.
ஈபிஎஸ் மதுரையில் மாநாட்டு கூட்டிய அதேநாளில் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை சென்னையில் கூட்டினார் ஓபிஎஸ். அந்தக் கூட்டத்தில், “அதிமுக தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. அந்தத் தகுதியை அவர் இழந்துவிட்டார். அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் நடைபெற்று வருகிறது. மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. அது கூடிய விரைவில் வரும். அப்போது தெரியும். நாம் தர்மத்தின் பக்கம் சென்றுகொண்டு இருக்கிறோம் என்று. எதற்கும் அஞ்சவேண்டாம். பொறுமையாக இருங்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மா அதிமுகவை காப்பாற்றும்’’ என்று பேசினார் ஓபிஎஸ்.
இதற்கு நடுவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தள்ளுபடி செய்திருக்கிறது. இதற்கும் வெற்றிக்கொண்டாட்டம் போடுகிறது ஈபிஎஸ் தரப்பு.
அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் இனி என்னாகும் என்ற கேள்வியுடன் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜிடம் பேசினோம்.
‘’மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்திய மாநாடு என்பது அவரது அணியைச் சேர்ந்த பணம் படைத்த முன்னாள் அமைச்சர்களை கொண்டு ‘தலைக்கு விலை வைத்து’ திரட்டி வரப்பட்ட தொண்டர்களை கொண்டு நடத்தப்பட்ட மாநாடு. தென்மாவட்ட தொண்டர்களின் பங்களிப்பு இல்லாமலேயே பிற மாவட்ட ஆட்களை கூட்டி வந்து தனக்கு தென்மாவட்டங்களில் ஆதரவு இருப்பதாக காண்பித்துக்கொண்ட மாநாடு.
அப்படி நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்றவர்களும் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. அவரது தரப்பினர் கொடுத்த கத்தை பணத்திற்காக மாநாட்டிற்கு வந்து தலை காட்டி சென்றவர்கள் தான் அதிகம். அப்படி நடத்தப்பட்ட புளியோதரை மாநாடு தான் அது.
ஒரு கட்சிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்றால் முதலில் கனிவும் துணிவும் இருக்க வேண்டும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை அன்னமிட்டே வளர்த்தார். பள்ளியிலும் பந்தி வைத்த கட்சி. ஆலயத்திலும் அன்னமிட்ட கட்சி. அதை மறந்து தன் தொண்டர்களுக்கு புளியோதரை போட்ட எடப்பாடியால் எப்படி கட்சியை வளர்க்க முடியும். இதன் மூலம் அவர் தனது தரத்தை காட்டியிருக்கிறார். வந்த தொண்டர்களும் அதனை புரிந்து கொண்டு சென்றிருக்கிறார்கள். மதுரை மாநாடு புளியோதரை மாநாடு என்றும், எடப்பாடி பழனிசாமி இனி புளியோதரை சாமி என்றும் அழைக்கப்படுவார்.
நீதிமன்ற முன்னெடுப்புகள் என்பது ஒரு சம்பிரதாய சடங்கு. அது ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்தாலும் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். ஒரு பொதுக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியை முன்வைத்துத்தான் அதிமுக என்ற கட்சியே உதயமானது. அந்த நேரத்தில் மக்கள் தான் அந்தக் கட்சியை தூக்கிப் பிடித்தார்கள். அதேபோன்று இப்போதும் ஒரு பொதுக்குழுவில் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த அநீதிக்கு எதிராகவும் மக்கள் தான் எங்களை தூக்கிப் பிடிப்பார்கள். அவர்களின் ஆதரவை துணையாக கொண்டு நாங்கள் வளர்வோம். அதற்கான முன்னெடுப்புகளில் தீவிரம் காட்டுவோம்’’ என்றார் அவர்.
ஓபிஎஸ்ஸின் தென் மண்டலத்தில் மாநாடு கூட்டி தனது செல்வாக்கை நிலைநிறுத்தி இருக்கிறார் ஈபிஎஸ். இதற்குப் போட்டியாக ஈபிஎஸ் தரப்புக்கு செல்வாக்குள்ள காஞ்சிபுரத்திலிருந்து அடுத்த மாதம் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் ஓபிஎஸ். அவரது செல்வாக்கையும் பார்க்க ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது தமிழகத்து அரசியல் அரங்கு!