கேரளாவில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகிய பிரபலங்கள், பாஜகவில் இணைந்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில் இது பாதிப்பை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் கணக்குகள் மாறி வருகிறது. குறிப்பாக கட்சிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே அதிருப்தியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். குறிப்பாக பிற கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தங்கள் வசம் இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பதவியில் இருந்த எம்எல்ஏ விஜயதரணி, பாஜகவில் இணைந்திருந்தார். இதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்துவிட்டார். இது மட்டுமின்றி அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏக்களாக இருந்த 15க்கும் மேற்பட்டோர் பாஜகவில் சமீபத்தில் இணைந்திருந்தனர்.
அந்த வகையில் கேரளாவிலும் ஏராளமான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா கடந்த பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்கிற தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே முன்னாள் விளையாட்டு வீராங்கனையும், காங்கிரஸ் கட்சியின் விளையாட்டு பிரிவு தலைவராக இருந்தவருமான பத்மினி தாமஸ் விரைவில் பாஜகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் கடந்த 2020 உள்ளாட்சித் தேர்தல்களில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் தற்போது பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் மற்றொரு சீனியரான தம்பனூர் சதீஷ் விரைவில் பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இருப்பினும் பாஜக அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே சிபிஎம் கட்சியின் தேவிகுளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் பாஜகவில் அவர் இணைவது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைமையில் உள்ள சிலர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே அடுத்தடுத்து அரசியல் கட்சிகளில் இருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு முக்கிய நபர்கள் தாவி வருவது குறித்து காங்கிரஸ் கட்சியும், சிபிஎம் கட்சியும் அமைதி காத்து வருகிறது. குறிப்பாக கட்சியில் பல ஆண்டுகளாக ஓரம் கட்டப்பட்டிருந்த நபர்கள் தான், தற்போது பாஜகவிற்கு செல்வதாக அவர்கள் விமர்சித்து வருகின்றனர். எனவே இது தங்களுடைய கட்சிகளில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இந்த கட்சிகளில் இருந்து பாஜகவில் தற்போது இணைந்துள்ளவர்களுக்கு, சீட் கொடுக்கப்பட்டால் அந்தக் கட்சியில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் அதனை ஏற்க மறுத்து எதிராக திரும்புவார்கள் எனவும் இரு கட்சிகளும் அரசியல் கணக்குகளை போட்டு வருகின்றன.