அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் சுற்றியுள்ள சில கிராமங்களை இணைக்க அரசு முடிவெடுத்து, மக்களிடம் கருத்து கேட்க அறிவித்துள்ளது. அதன்படி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெயங்கொண்டம் அடுத்த கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.16) நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "தங்கள் கிராமம் கீழகுடியிருப்பு ஊராட்சியில் உள்ளது. தங்கள் கிராமத்தில், அனைவரும் கூலிவேலை செய்து வருகிறோம். பலர் சென்னை, திருப்பூர், கேரளா என பிற பகுதிகளில் தங்கியும் கூலி வேலை செய்து வருகிறோம். இந்நிலையில், கல்லாத்தூர் கிராமத்தை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால், குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்த்தப்படும்.
100 நாள் வேலையும் பறிபோகும். மத்திய, மாநில அரசுகள் கிராமங்களுக்கு வழங்கும் இலவச வீடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கிடைக்கப் பெறாமல் போகும். மேலும், எங்கள் கிராமத்துக்கு சொந்தமான வயல்பகுதிகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு, தற்போது தான் அவற்றை மீண்டும் எங்களுக்கு அரசு வழங்கியுள்ளது.
இதனை சீரமைக்கக்கூட இயலாத நிலையில் வறுமையில் உள்ளோம். இந்த நிலையில் எங்கள் கிராமம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால், குடிசையில் குடியிருக்கும் பெரும்பாலான மக்கள் குடிசை வீட்டிலேயே வாழ்நாளை கழிக்கும் சூழல் ஏற்படும். எனவே, தங்களது கிராமத்தை ஜெயங்கொண்டம் நகராட்சியுடன் இணைக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளனர்.