திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க கடைக் காரர்கள், பொதுமக்கள் ஆகியோர் மறுப்பதால் புழக்கத்தில் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிட்ட நாணங்களில் “10 ரூபாய் நாணயம்” உலக அரங்கில் பிரபலமடைந்துள்ளது. இதற்கு, சொந்த நாட்டிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழகத்தில், ‘10 ரூபாய் நாணயம்’ செல்லாது என்று பரவிய மிகப்பெரிய வதந்தியே காரணமாகும். ஒரு மாதம், இரு மாதம் என்று இல்லாமல் ஓரிரு ஆண்டுகளாக, 10 ரூபாய் நாணயத்தை வாங்கப் பொது மக்கள் மறுத்து வருகின்றனர்.
பெட்டிக் கடைகள் முதல் வர்த்தக நிறுவனங்கள் வரை 10 ரூபாய் நாணயத்தைக் கண்டால் அலறும் நிலை இருந்தது. இவர்கள் மட்டும் இப்படியில்லை, அவர்களுடன் இணைந்து வங்கியாளர்கள், நியாயவிலை கடைகள், டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என அரசு சார்ந்த நிறுவனங்களும் வாங்க மறுத்தது ‘உச்சம்’ எனக் கூறலாம்.
10 ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய மாநில அரசுகள் எடுத்துரைத்தும் பலனில்லை. பொதுமக்களிடம் நிலவிய அச்சம் விலகவில்லை. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக, சென்னையில் 10 ரூபாய் நாணயம் புழங்கத் தொடங்கியது.
அதேநேரத்தில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்துக்கு வரவில்லை. இதன் எதிரொலியாக, 10 ரூபாய் நாணயங்களை அரசு சார்ந்த நிறுவனங்கள் முதலில் பெற்று, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சித்தன. இருப்பினும், அரசு சார்ந்த நிறுவனங்களில் 10 ரூபாய் நாணயங்களை ஒப்படைக்கும் செயலில் மட்டும் பொதுமக்கள் கவனம் செலுத்தினர். அவர்கள் வாங்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் வாங்க மறுக்கும் நிலை தொடர்கிறது. கீரை, காய்கறிகளைச் சுமந்து சென்று விற்பனை செய்யும் தொழிலாளர்கள் முதல் பெட்டிக் கடைகள், தேநீர்க் கடைகள் மற்றும் கிராமப்பகுதியில் இயங்கும் கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுகிறது.
மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள், 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், நடத்துநர்கள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இதனால், பொது மக்கள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க நடத்துநர்களும் மறுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், இரண்டு தரப்புக்கும் வாக்குவாதங்களும் ஏற்பட்டுச் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதேநிலை வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களிலும் நிகழ்வதைக் காணமுடிகிறது. இதில் வர்த்தக ரீதியாகச் சிக்கலும் நீடிக்கிறது.
சட்டப்படி குற்றம்: இதனால், 10 ரூபாய் நாணங்கள் செல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, அனைத்து தரப்பு மக்களும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு வர்த்தகர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், வங்கியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் எதிரொலியாக 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் மக்களிடையே பரவிய வண்ணம் உள்ளன. பல கிராமங்களில் உள்ள கடைகளில் வாங்க மறுக்கின்றனர்.
அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும். செல்லாது என்பதும், வாங்கவும், கொடுக்கவும் மறுப்பதும் குற்றமாகும். இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் அனைத்து வகையிலும் செல்லத்தக்கதாகும். பொதுமக்களை அலைக்கழிக்காமல் கடை உரிமையாளர்கள் 10 ரூபாய் நாணயங்களை அனைத்து பரிவர்த்தனைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.