ராமேஸ்வரம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் கெபுபாராவிலிருந்து தென்மேற்கே 800 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்காளம் மாநிலம் கேனிங்கிலிருந்து தெற்கில் 810 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
மேலும், இது புயலாக வலுப்பெற்று வங்க தேசத்தை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவேண்டும் எனவும் மீன்வளத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.