கோவை: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கோவை - அபுதாபி விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு மட்டும் விமான சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் அபுதாபிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் தொடங்கியது. பல ஆண்டுகள் கோரிக்கைக்கு பின் தொடங்கப்பட்ட இந்த சேவை பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 186 பேர் பயணிக்ககூடிய ‘ஏர்பஸ் ஏ320’ ரக விமானம் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் கோவையில் இருந்து அபுதாபி செல்லும் போது 93 சதவீத பயணிகளுடனும் மறுபுறம் அபுதாபியில் இருந்து கோவைக்கு வரும் போது 57 சதவீத பயணிகளுடனும் விமானம் இயக்கப்பட்டது. இத்தகைய வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அக்டோபர் கடைசி வாரத்தில் தொடங்கி மார்ச் கடைசி வாரம் வரை அமல்படுத்தப்படும் குளிர்கால அட்டவணையில் இந்த சேவை இடம்பெறாதது விமான பயண ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அனுமதி தற்போது வரை கிடைக்கவில்லை. இதற்கும் விமான நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை” என்றனர்.
கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) இயக்குநர் டி.நந்தகுமார் கூறும்போது, “மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கப்பட்ட கோவை -அபுதாபி விமான சேவை கோவை உள்ளிட்ட சுற்றுப்புற ஏழு மாவட்ட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் குளிர்கால அட்டவணையில் இச்சேவை சேர்க்கப்படாதது மிகுந்த கவலை அளிக்கிறது. விமான சேவை தொடர விமான போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.