தொடர்ந்து உயரும் பெரிய வெங்காயத்தின் விலை: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.44


சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கிலோ ரூ.44-க்கு விற்கப்படுகிறது.

வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக காரீப் பருவ வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் பெரிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயம் குறைவாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெங்காய தேவைக்கு வெளி மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. நாசிக்கில் வரத்து குறைவால், கோயம்பேடு சந்தைக்கும் வெங்காய வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.40 ஆக உயர்ந்திருந்த நிலையில், நேற்று கிலோ ரூ.44 ஆக உயர்ந்துள்ளது. வணிக வளாக கடைகளில் கிலோ ரூ.55-க்கும், சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.60-க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சாம்பார் வெங்காயத்தின் விலை ரூ.30 ஆக நீடித்து வருவது அவர்களுக்கு ஆறுதலை கொடுத்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான கேரட் ரூ.60, உருளைக்கிழங்கு ரூ.32, பீன்ஸ் ரூ.30, நூக்கல் ரூ.25, தக்காளி கிலோ ரூ.22, கத்தரிக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய் தலா ரூ.20, பீட்ரூட், அவரைக்காய், பாகற்காய் தலா ரூ.15, முட்டைகோஸ், வெண்டைக்காய், புடலங்காய், முள்ளங்கி தலா ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.

பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பது குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "நாங்கள் நாசிக்கிலிருந்துதான் வெங்காயத்தை வரவழைக்கிறோம். அங்கே கிலோ ரூ.38-க்குவிற்கப்படுகிறது. லாரி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி என செலவுகள் உள்ளன. இவற்றை எல்லாம் சேர்த்து தற்போது ரூ.44-க்கு விற்கப்படுகிறது. விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. விரைவில் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.

x