ராமாயணத்தை பரதநாட்டிய வடிவில் நாடகமாக அரங்கேற்றிய 138 சிறப்பு குழந்தைகள் @ புதுச்சேரி


புதுச்சேரி: ராமாயணத்தை விவரிக்கும் ராமகதா சங்கிரகம் என்ற நாட்டிய நாடகத்தை 138 சிறப்பு குழந்தைகள் புதுச்சேரியில் நடத்தினர்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான புராணமான ராமாயணத்தை, நடனம் மற்றும் நாடகம் மூலம், சத்யா சிறப்பு பள்ளி மாணவர்கள் சென்னை ரசாவுடன் இணைந்து புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் வழங்கினர். சிறப்பு குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களின் அங்கீகாரம் கிடைக்கவும், இந்தியாவின் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக விழா ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

மொத்தம் 138 குழந்தைகள் தங்கள் திறமைகளை கதை, நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வின் இயக்குநராக இருந்த ரசாவின் நிறுவனர் அம்பிகா காமேஸ்வர், "இந்நிகழ்வு ராமாயணத்தை சொல்வது மட்டும் அல்ல. சிறப்பு குழந்தைகளின் நம்பிக்கையை மேம்படுத்தி, கலையின் தன்மையை உணர வைக்கவும் நடத்தப்பட்டது" என்றார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற 12 வயது கிஷோர் கூறுகையில், "ஹனுமான் கதாபாத்திரம் செய்ய விரும்பி ஏற்றேன். இது எனக்கு பலம், மகிழ்ச்சியை தந்தது" என்றார்.

அவரது தாய் மல்லிகா கூறுகையில், "இந்த நாடகம் கிஷோரை மாற்றியது. அவனது நம்பிக்கை உயர்ந்துள்ளது. புதிய நண்பர்களை நாடக பயிற்சி மூலம் பெற்றான். நடனமும், நாடகமும் இணைந்து குழந்தைகள் கலையை வெளிப்படுத்தியதை பார்க்க அழகாக இருந்தது" என்றார்.

சத்யா சிறப்பு பள்ளி இயக்குநர் சித்ராஷா கூறுகையில், இந்த நிகழ்ச்சியானது பல்வேறு சிறப்பு தேவை உள்ளோருக்காக கவனத்துடன் உருவாக்கினோம். ஒலியைப் பற்றிய குறியீடுகள், சைகை மொழியை நடனத்தின் காட்சி வடிவமைப்பில் சேர்த்தோம். சக்கர நாற்காலிகளுடன் இயங்குவோருக்கும் நடன வரிசையில் வாய்ப்புகள் தந்தோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த உரிமை உள்ளது என்பதை நம்பி செயல்படுத்தினோம்" என்றார்.

x