சீமானின் கரும்பு விவசாயி சின்னத்தைக் கைப்பற்றிய பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தங்களுடன் கூட்டணி சேர வருமாறு நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு உதயமான சீமானின் நாம் தமிழர் கட்சி, 2011, 2016, 2021 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. இதேபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், புதுச்சேரியிலும் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அந்த கட்சி போட்டியிட்டது. இதுவரை மாநில மற்றும் தேசிய தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை தக்கவைத்துள்ளது.
குறிப்பாக 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி, 6.89 சதவீத வாக்குகளை பெற்றது. முதல் முறையாக நாம் தமிழர் கட்சி போட்டியிட்டபோது, அந்த கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த சின்னம் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டு, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதை விவசாயி சின்னம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தேர்தல்களில் முன்னிறுத்தி வந்தனர். இந்த நிலையில், தற்போது அந்த சின்னத்தை கோருவதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டதாகச் சொல்லி அதை வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கிவிட்டது தேர்தல் ஆணையம்.
கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி எனும் கட்சிக்குத்தான் இப்போது கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரு சில தொகுதிகளுக்கு முதன் முதலில் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தையும் துவங்கியது நாம் தமிழர் கட்சி. தற்போது சின்னம் முடிவாகாததால் பிரச்சாரத்தை தொடர முடியாத நிலையில் இருப்பதாகவும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாத நிலையில் இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே அந்த கட்சிக்கு மற்றொரு பின்னடைவாக, கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் வெகுவாக சிதறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் மொத்தமாக சரியும் வாய்ப்பும் இருப்பதாக அக்கட்சியினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட தொகுதிகளை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கத் தயாராக இருப்பதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவித்துள்ளது. அந்தக் கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காத நாம் தமிழர் கட்சி, இந்த தேர்தலில் சின்னத்திற்காக கர்நாடகாவை சேர்ந்த கட்சியுடன் கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் வாசிக்கலாமே...
மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!
இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!