“கோவை மக்களிடம் நிர்மலா சீதாராமன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” - தமிழக காங். தலைவர்


கோவை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசனிடம் கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை இணையத்தில் பாஜகவினர் வெளியிட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜகவினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோவை காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இதில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் பகவதி, மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ‘பன் மாலை’ அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ‘க்ரீம் பன்’ வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: இதுவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு சிங்கிள் பைசா தமிழ் நாட்டுக்கு கொடுத்து இருப்பாரா? தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் எண்ணத்துடன் மத்திய பாஜக இருக்கிறது. நீங்களே அழைத்ததால், தனிநபராக இல்லாமல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதியாக சென்றவர் அன்னபூர்ணா சீனிவாசன். இவர், தனது துறை சார்ந்த பிரச்சினைக்கு நியாயம் கேட்டார். தவறாக அவர் ஏதும் பேசவில்லை. கோவை தமிழில் மரியாதையாக நிதியமைச்சரிடம் எங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது எனக் கூறினார்.

பின்னர் அவரை மிரட்டி, விடுதிக்கு வர வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அதனை வீடியோவாக வெளியிட்டு, தங்களது ஆணவத்தின் உச்சத்தை காட்டியுள்ளனர், என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, ‘‘அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலையிட்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு. அவரே பெருந்தன்மையாக மன்னிப்பு கேட்டு இருந்தாலும், அதை வீடியோவாக வெளியிட்டது மிகப்பெரிய தவறு. தொழிலாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்காக அவர் குரல் கொடுத்துள்ளார். உடனடியாக நிதியமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் நாடு தழுவிய போராட்டமாக இது முடியும், என்றார்.

x