சமையல் அறையைக்கூட பயன்படுத்தவில்லை... தயாநிதிமாறன் எம்.பி குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை பதிலடி!


தயாநிதி மாறன் எம்.பி

ஊட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த திருமண விழா தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக எம்.பி தயாநிதி மாறனுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகை

ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. இது தொடர்பாக திமுக எம்.பி தயாநிதி மாறன், ’’ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டியில் இருக்கக் கூடிய ஆளுநர் மாளிகையில் அவருடைய மகளுக்கு எந்த அடிப்படையில் திருமணம் நடத்தினார்? தமிழக அரசின் பணத்தில் திருமணம் நடத்த அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இதற்கு ஆளுநர் ரவி பதில் அளிப்பாரா” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆளுநரின் மகள் திருமணத்திற்காக ஆளுநர் மாளிகை பயன்படுத்தப்படவில்லை. அங்கு விருந்தினர்கள் யாரும் தங்க வைக்கப்படவில்லை. அங்குள்ள சமையல் அறையைக் கூட இதற்கென உபயோகப்படுத்தப்படவில்லை.

ஆளுநர் ஆர்.என்.ரவி

மேலும், விருந்தினர்களுக்கு உணவு மற்றும் தேநீர் அனைத்தும் வெளியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இவை அனைத்தையும் ஆளுநர் தனது சொந்த பணத்தில் இருந்தே செய்துள்ளார். இந்நிலையில் ஆளுநர் மீது அவதூறு பரப்பும் வகையில் கேள்வி எழுப்பியுள்ள மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் செயல் கண்டனத்திற்குரியது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x