முதலீட்டுக்கான பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தில் 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு


முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: பழனிசாமி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அரசுமுறைபயணம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முதலீடுகள், அமெரிக்க பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வெள்ளை அறிக்கை வெளியிட கோருகின்றனவே? - அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். அதுமட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் புள்ளி விவரங்களுடன் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறியுள்ளார். அதை குறிப்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் படித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். பழனிசாமி முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாக கூறினர். அதில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதைகூறினால் அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்துள்ளேன்.

ஜிஎஸ்டி தொடர்பாக தொழில் செய்பவர்களின் நியாயமான கோரிக்கையை முன்வைத்தார் என்பதற்காக, அதனை மத்தியஅமைச்சர் கையாண்ட விதம் வெட்கப்படவேண்டிய ஒன்று. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய கல்விக் கொள்கை, மெட்ரோ ரயில் திட்டம் 2 ஆகிய நிதித்தேவைகளுக்காக பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா? - நிச்சயமாக, உறுதியாக மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி கோருவது தொடர்பாக சந்திப்பேன். பள்ளிக் கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை, அதிகாரிகளை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடமும் வலியுறுத்த உள்ளேன்.

குறைந்த அளவு முதலீடே ஈர்க்கப்பட்டதாகவும் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே? - இது அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவது. மற்ற மாநிலத்தவர்கள், அவர்கள் மாநிலத்துக்கானதை கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதுபோல நாங்களும் நம்முடைய மாநிலத்துக்கு என்னென்ன வேண்டுமோ, என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டுமோ அதை கேட்கிறோம். இதில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடுகள் வந்துள்ளன. உறுதியான முதலீடுகளாகவும் வந்துள்ளன.

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக-வுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கிறாரே? - அதை திருமாவளவனே விளக்கமாக கூறியிருக்கிறார். அந்த விளக்கத்துக்கு மேல் பெரிய விளக்கம் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது அரசியல் நோக்கத்தோடு நடத்தப்படக்கூடிய மாநாடு இல்லை. இதற்கும், அரசியலுக்கும் முடிச்சுப் போடவேண்டாம் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

அதிமுக காலத்தில் 10 சதவீதம்கூட முதலீடுகள் ஈர்க்கப்படவில்லை, நிறைவேற்றப்படவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ரூ.7,000 கோடி முதலீடுகள் எப்படி சிறப்பாக செயல்படுத்தப்படும்? - ஏற்கெனவே எவ்வளவு முதலீடுகள் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என நானும் தொழிற்துறை அமைச்சரும் விரிவாக கூறியிருக்கிறோம். மேலும் இப்போது வந்திருக்கக்கூடிய முதலீடுகள் 100-க்கு 100 சதவீதம்நிறைவேற்றக்கூடிய வகையில்தான் நாங்கள் ஈர்த்திருக்கிறோம். அதற்கான வேலைவாய்ப்புகளும் விரைவாக உருவாக்கப்படும். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

x