ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்பட வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைதள பதிவால் திடீர் சர்ச்சை


சென்னை: ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவனின் சமூக வலைதள பதிவால் திடீர் சர்ச்சை கிளம்பியுள்ளது.

விசிக மகளிரணி சார்பில் நடைபெறவுள்ள மது மற்றும் போதை ஒழிப்புமகளிர் மாநாடு தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கடந்த 12-ம் தேதி நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.

இதில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் முன்பு கூட்டணி ஆட்சி என்ற குரலை யாரும் உயர்த்தினார்களோ, இல்லையோ, 2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும்தான். இடங்கள் ஒதுக்கீடு அல்ல, அதிகாரத்தில் பங்கு கேட்டோம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதுதான் 1999-ல் தேர்தல் அரசியலில் விசிக அடியெடுத்து வைத்தபோது முன்வைத்த முழக்கம்.

நான் முதன்முதலில் நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவித்தபோது, ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்தேன். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஜனநாயகத்தை கொடுக்க வேண்டும். அதிகாரத்தை சமூகவாரியாக மக்களுக்கு அளிக்க வேண்டும். இதையெல்லாம் சொல்லும் துணிச்சல் பெற்ற இயக்கம் விசிக. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த காணொலி திருமாவளவனின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் காலை 8.45 மணியளவில் பகிரப்பட்டது. பிறகு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது. இதையடுத்து, 11.30 மணியளவில் மீண்டும் அதே காணொலி பகிரப்பட்டதோடு, ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கு ஜனநாயகம், எளிய மக்களுக்கு அதிகாரம்’ எனவும் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவும் நீக்கப்பட்டது.

ஏற்கெனவே, ஆக.13-ம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், “எந்த காலத்திலும் ஒரு பட்டியலினத்தவர் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது”என்று திருமாவளவன் பேசியிருந்தார். இது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே, விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசும் திருமாவளவனின் காணொலி பகிரப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்கு, "தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தபோதே ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்னும் முழக்கத்தை முன்வைத்தோம். அதை நினைவுபடுத்தி நான் பேசியதை அட்மின் குழுவினர் பதிவிட்டுள்ளனர் என கருதுகிறேன். ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. இன்னும் அவர்களை நான் தொடர்புகொண்டு பேசவில்லை" என திருமாவளவன் பதிலளித்தார்.

மீண்டும் பகிர்வு: இந்நிலையில், திருமாவளவன் பேச்சின் முழு காணொலிக்கான இணைப்புடன் கூடிய காணொலி சுருக்கம் மீண்டும் மாலை 5.45 மணியளவில் அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டது. அந்த பதிவில், ‘கடைசிமனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம். ஆட்சியிலும் பங்கு. அதிகாரத்திலும் பங்கு என1999-ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்தபோதே உரத்து முழங்கியஇயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ என்று கடந்த செப்-12 ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

x