தமிழ்நாட்டில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்!


சத்யபிரதா சாஹு

வாக்காளா் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரு மாதத்தில் 9.13 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மற்றும் திருத்தம் ஆகியவற்றிற்காக கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் வாக்குச்சாவடி அளவில் சிறப்பு முகங்கள் நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரங்களிலும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலம் மொத்தம் 9.13 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறுகையில், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக கடந்த 4, 5 மற்றும் 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு மாத காலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்து 13 ஆயிரத்து 535 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சத்யபிரதா சாஹு

வாக்காளர் பட்டியலில் பெயா்களை நீக்க ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 46 மனுக்களும், திருத்தங்களை மேற்கொள்ள 4 லட்சத்து 99 ஆயிரத்து 302 மனுக்களும் வழங்கப்பட்டுள்ளன. பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தங்கள் ஆகிய பணிகளுக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 லட்சத்து 33 ஆயிரத்து 955 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை அளிக்க டிசம்பர் 12-ம் தேதி கடைசி நாளாகும். டிச. 26-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தோதல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x