ஆளுநர் பற்றி தவறாக பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்பொழுது ஒரு பெற்றோர் நீட் தேர்வை எப்பொழுது ரத்து செய்வீர்கள் என குரல் எழுப்பினார். அதற்கு ஆளுநர் I Will Ever Never என பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது மேடையில் பேசிய உதயநிதி, தமிழக மாணவர்களையும் மக்களையும் ஆளுநருக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசி இருந்தார். மேலும் அவர் ஆளுநர் கருத்திற்கு எதிராக அதை சொல்வதற்கு நீங்கள் யார் என கேள்வி எழுப்பியதுடன், நீங்கள் என்ன மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு போஸ்ட்மேன் மட்டும் தான் எனவும் முதல்வர் சொல்வதை மத்திய அரசிடம் சேர்க்கும் பணியை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும். மரியாதை கொடுத்தால் அதை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என மேடையில் சவால் விடும் அளவிற்கு பேசியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாட்டில் நீங்களே ஒரு தொகுதியை முடிவு செய்யுங்கள், நான் இல்லை எங்கள் கழகத்தின் கடைகோடி தொண்டனை வைத்து ஜெயித்து காண்பிக்கிறோம் என பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.
பொறுப்பான அமைச்சர் பதவியில் இருக்கும் இவரது பேச்சு தமிழக மக்களை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக தமிழக மக்களின் பிரதிநிதியாகவும் ஒரு மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்து கொண்டு இது போன்று மக்கள் உணர்வை தூண்டும் வகையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் ராமசந்திரன் கூறுகையில், "நான் அளித்த புகாருக்கு போலீஸார் இதுவரை சிஎஸ்ஆர் கொடுக்கவில்லை. அந்த புகார் கடிதம் எங்கு இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்" என்று கூறினார்.