திருமா வீடியோ சலசலப்பு முதல் ‘குரூப்-2’ கேள்வி சர்ச்சை வரை - டாப் 10 விரைவுச் செய்திகள்


ஆட்சி, அதிகாரத்தில் பங்கு - திருமாவளவன் வீடியோ சலசலப்பு: விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை காலை, “2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விசிக. இடங்கள் ஒதுக்கீடு அல்ல; அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும் எனக் கேட்டோம்” என அவர் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்த பின்னர், மாலையில் அந்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த வீடியோ இணைப்புக்கு மேல், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! - என 1999-ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி" என்று கடந்த செப்.12-ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்: மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என 1999-ல் பேசினேன். இதை நினைவுபடுத்தி செங்கல்பட்டில் நான் பேசியதை எனது அட்மின் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஏன் அதை நீக்கினார் எனத் தெரியவில்லை. இன்னும் எனது அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை. அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போடக் கூடாது,” என்று கூறினார். இதன் தொடர்ச்சியாகவே, அந்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. மேலும், “அரசியல் கணக்குப் போட்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தவில்லை,” என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த கருத்துகள்: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வந்த முதலீடுகள் குறித்து நான் விளக்கமாக கூறியுள்ளேன். அதுமட்டுமின்றி தொழில்துறை அமைச்சர் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார். சட்டப்பேரவையிலும் தெளிவாக கூறியுள்ளார். அதை குறிப்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்வதாகக் கூறினர். அதில் 10 சதவீத ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கூறினால் அவருக்கு மிகப் பெரிய அவமானமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்துள்ளேன். இது அரசியல் நோக்கத்துடன் கூறப்படுவது. இதில் நாங்கள் எதிர்பார்த்தைது விட அதிக முதலீடுகள் வந்துள்ளது. உறுதியான முதலீடுகளாகவும் வந்துள்ளது. அதில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அன்னபூர்ணா: முதல்வர் கருத்தும், வானதி பதிலடியும்: “அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஜி.எஸ்.டி. குறித்த தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறியிருக்கிறார். கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழகத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மன்னிக்காது” என்று என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதனிடையே, “தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்” என கோவை அன்னபூர்ணா உணவகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி வாக்குறுதி: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தோடா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “ஜம்மு காஷ்மீர் விவசாயிகள், பிரதமர் சம்மன் நிதியின் கீழ் 6,000 ரூபாய் பெறுகிறார்கள். இப்போது பாஜக அதை ரூ.10,000 ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளது” என்றார்.

வெங்காய ஏற்றுமதி வரி 20% ஆக குறைப்பு: விவசாயிகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மோடி அரசு குறைத்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.

மம்தாவின் கடைசி முயற்சி: கொல்கத்தாவில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களைச் சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, பணிக்குத் திரும்புமாறு அவர்களை வலியுறுத்தினார். போராட்டம் நடத்திய மருத்துவர்களை சமாதானப்படுத்த தான் மேற்கொண்ட கடைசி முயற்சி இது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்: மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, "வெளிநாடுகள், உள்நாட்டுப் பயணங்களை திட்டமிடும் பிரதமர் கவனமாக மணிப்பூரைத் தவிர்த்து வருகிறார்” என்று சாடியுள்ளது.

குருப்-2 தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர்; ஆப்சென்ட் 2.12 லட்சம்! - குருப்-2 பதவிகளில் 507 காலியிடங்கள், குருப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் சனிக்கிழமை நடந்தது. தேர்வெழுத 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டுமே தேர்வெழுதினர். எஞ்சிய 2 லட்சத்து 12 ஆயிரத்து 661 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. பொது அறிவு பகுதி மற்றும் பொதுத் தமிழ் பகுதியில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆளுநர் பதவி: குரூப்-2 தேர்வு கேள்வியால் சர்ச்சை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த குரூப்-2 முதல் நிலைத் தேர்வின் பொது அறிவுப் பகுதியில் ஆளுநர் பதவி குறித்த சர்ச்சைக்குரிய கேள்வி மற்றும் பதிலுக்கான ஆப்ஷன்கள் இடம்பெற்றிருந்தது கவனம் பெற்றுள்ளது.

‘கூற்று - காரணம்’ வடிவிலான அந்தக் கேள்வியில், கூற்று பகுதியில், ‘இந்திய கூட்டாட்சியில் மாநில அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என இரு வகையான பணிகளைச் செய்கிறார்’ என்று கொடுக்கப்பட்டு, காரணம் பகுதியில், ‘ஆளுநர் அலுவலகம் கூட்டாட்சி முறைக்கு எதிரானது’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக பின்வரும் 5 ஆப்ஷன்கள் தரப்பட்டன. அவை:

(A) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
(B) கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் உள்ளது
(C) கூற்று தவறு . காரணம் சரி
(D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், கூற்றுக்கான சரியான விளக்கமாக காரணம் இல்லை.
(E) விடை தெரியவில்லை.

மேற்கண்டவற்றில் சரியான விடையை தேர்வர்கள் தேர்வுசெய்ய வேண்டும். தமிழக ஆளுநர் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆளுநர் பதவி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் சர்ச்சைக்குரிய வினா கேட்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தேவநாதன் யாதவ் மீது குவியும் புகார்கள்: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஏற்பாடு செய்த சிறப்பு முகாமில் தேவநாதன் யாதவ் மீது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

x