மதுரையில் விசிக கொடிக் கம்பம் திடீர் அகற்றம் - கட்சியினர் சாலை மறியல்


மதுரை: மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் திடீரென அகற்றப்பட்டதால், அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அழகர் கோயில் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியபோது, மதுரையில் முதன் முறையாக கே.புதூர் மார்க்கெட் அருகில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் 20 அடி உயரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை திருமாவளவன் ஏற்றியுள்ளார். அப்பகுதியிலுள்ள கால்வாய் அகலப்படுத்தும் பணிக்கென விசிக கொடி கம்பம் திடீரென அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே கட்சி கொடிக் கம்பம் இருந்த இடத்திலேயே சுமார் 60 அடி உயரத்தில் விசிக கொடிக் கம்பம் 2 நாளுக்கு முன்பு நடப்பட்டது.

திருமாவளவன் எம்பி மூலம் கொடி ஏற்றுவதற்காக அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இருப்பினும் உரிய அனுமதியின்றி இக்கொடி கம்பம் நடப்பட்டதாக கூறி கொடி கம்பத்தை அகற்ற போலீஸார் முயற்சித்தனர். இது பற்றி அறிந்த நகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நள்ளிரவில் அங்கு திரண்டு போராட்டம் நடத்தினர். முறையாக அனுமதி பெற்று கொடி ஏற்றுங்கள் என போலீஸார் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து விஏஓ புகாரின் பேரில், கொடிக் கம்பம் அப்புறப்படுத்தப்பட்டது. இச்செயலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கே.புதூர் பேருந்து நிலையத்தில் காலை திரண்டனர்.

அவர்கள், மீண்டும் அதே கட்சி கொடிக் கம்பம் நிறுவ வேண்டும் என கோஷமிட்டு உண்ணாவிரத போராட்டம் செய்தனர். திடீரென அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக அழகர் கோயில் ரோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மெயின்ரோட்டில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

போராட்டக்காரர்களிடம் போலீஸார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், ஏற்கெனவே இருந்த இடத்தில் கொடிக் கம்பம் நடுவதற்கு வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதன்பின், போலீஸார் பறிமுதல் செய்த கொடி கம்பம் செப்.20-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி அதே இடத்தில் ஏற்றப்படும் என அக்கட்சியினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தையொட்டி புதூர் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

x