மதுரை மக்கள் நீதிமன்றத்தில் ரூ.45.70 கோடிக்கு நிவாரணம்; மீண்டும் சேர்ந்த 26 தம்பதியினர்!


உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்.

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.45.70 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் விவாகரத்து கோரிய 26 தம்பதியினர் மீண்டும் சேர்ந்தனர்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜி.சொக்கலிங்கம், எஸ்.ஆனந்தி ஆகியோர் தலைமையில் இரு அமர்வுகள் வழக்குகளை விசாரித்தது. இந்த அமர்வுகளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் பான்டுரெங்கன், மதுரசேகரன், வழக்கறிஞர்கள் ஹாஜா மைதீன், டி.எஸ்.முகமது மைதீன், மருத்துவர் கோபி மனோகர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

இரு அமர்வுகளிலும் மொத்தம் 356 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 30 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.4,02,47,334 நிவாரணம் வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை பதிவாளர் (நீதித்துறை) என்.வெங்கடவரதன் செய்திருந்தார்.

பாதிக்கப்பட்டோருக்கான காசோலை வழங்குகிறார் மாவட்ட நீதிபதி சிவகடாட்சம்

மாவட்ட நீதிமன்றம்: மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் 22 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, உசிலம்பட்டி, மேலூர் , திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்ட நீதிபதிகள் செங்கமலச் செல்வன், அள்ளி, ஜோசப் ஜாய் மற்றும் சார்பு நீதிபதிகள் முருகன், காமராஜ், பாரதிராஜா மற்றும் நீதித்துறை நடுவர்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் விசாரணையில் பங்கேற்றனர்.

மொத்தம் 5628 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 5532 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. பாதிக்கப்பட்டோருக்கு மொத்தம் ரூபாய்.416827276/- ( ரூ.41 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 276 ரூபாய்) நிவாரணம் வழங்கப்பட்டது. 293 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 39 சிவில் வழக்குகள், 144 காசோலை மோசடி வழக்குகள், 26 விவாகரத்து வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 26 விவாகரத்து வழக்குகளில் தம்பதியினர் இடையில் சமரசம் ஏற்பட்டு அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வாழ ஒத்துக்கொண்டு வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி ராஜ மகேஷ் செய்திருந்தார்.

x