கொடைக்கானல்: ஓணம் கொண்டாட்டத்துக்காக சாராய ஊறல் தயார் செய்த இருவர் கைது!


கைதானவர்கள்

கொடைக்கானல்: ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கொடைக்கானல் அருகே மேல்பள்ளம் பகுதியில் சாராய ஊறல் தயார் செய்த கேரளாவைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைக் கிராமமான வடகவுஞ்சி அருகே மேல்பள்ளம் பகுதியில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொடைக்கானல் போலீஸார் வடகவுஞ்சி, மேல்பள்ளம் பகுதியில் இன்று சனிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மேல்பள்ளம் பகுதியில் மணிகண்டன் என்பவரது தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 27 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த போலீஸார், அந்த தோட்டத்தில் இருந்த 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.

கைதான இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியைச் சேர்ந்த தேவசியா (71), டின்ஸ் (42) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் மணிகண்டனின் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக இருவரும் சேர்ந்து தோட்டத்தில் சாராய ஊறல் தயார் செய்துள்ளனர். விசாரணையில் இந்த தகவல்களை சேகரித்த போலீஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x