மார்க்சிஸ்ட்டுக்கு திண்டுக்கல்... மன வருத்தத்தில் திமுக!


திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட திமுகவினர் அதிர்ச்சிடைந்துள்ளனர். அதேசமயம் கம்யூனிஸ்ட் போட்டியிடுவதால், தங்களது வெற்றி சுலபம் என அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கடந்த முறை திண்டுக்கல்லில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ப.வேலுச்சாமி, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாமகவை வீழ்த்தினார். அப்போது, தென்னிந்தியாவிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிமுகம் காட்டிய தொகுதியாக திண்டுக்கல் கூறப்பட்டது. அதனால் இம்முறையும் திண்டுக்கல் நமக்கே கிடைக்கும் என்று திமுகவினர் நினைத்திருந்த நிலையில், தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திண்டுக்கல் தொகுதியை கைவிட்டுப் போகவைத்தது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் திமுக தலைவர்

திமுக தலைமையின் இந்த முடிவால் மாவட்ட திமுகவினர் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் சோர்ந்து போயுள்ளனர். ஆனால், எப்படியும் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வெற்றிபெறச்செய்யவேண்டும் என இரண்டு அமைச்சர்களுக்கும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் முழுக்க முழுக்க திமுகவை நம்பியே இருக்கிறார்கள்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக மூன்று முறை போட்டியிட்டு வென்றவர் பாலபாரதி. ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வெற்றி பெறவில்லை. தற்போது மக்களவை தொகுதி கிடைத்துள்ளதால் இழந்த பெருமையை மீட்க இது ஒரு வாய்ப்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கருதுகின்றனர்.

சச்சிதானந்தம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், "திண்டுக்கல் தொகுதி எங்களுக்குக் கிடைத்துள்ளது மகிழ்ச்சி. சென்னையில் 15-ம் தேதி மாநிலக்குழு கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு அன்று மாலையே வேட்பாளர் அறிவிக்கப்படுவார். யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் திமுக துணை இருப்பதால் நாங்கள் வெல்வது உறுதி" என்றார்.

அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதிக்கு பலரும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இருந்த போதும் திமுக வேட்பாளருக்கு நிகராக செலவழிக்க முடியாது என்பதால் பலரும் ஒருவித தயக்கத்திலேயே இருந்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களே பின்வாங்கியதால் யாராவது ஒரு தொழிலதிபரை பிடித்து நிறுத்தும் முடிவில் தான் அதிமுக தலைமையும் இருந்தது.

ஆனால், தற்போது திண்டுக்கல்லில் திமுக நேரடியாக களம் இறங்காததால், அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். திமுகவுடன் நேரடிப்போட்டி ஏற்பட்டால் எதிர்த்து ஜெயிப்பது கடினம் என்று ஒதுங்கியவர்களுக்கு எல்லாம் இப்போது உள்ளுக்குள் ஆசை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது.

பாலபாரதி - பாண்டி - சச்சிதானந்தம்

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஏற்கெனவே திண்டுக்கல் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு தோற்ற மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, முன்னாள் எம்எல் ஏ-வான பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியவர்களின் பெயர்கள் வேட்பாளர் பரிசீலனைக்கான லிஸ்ட்டில் அடுபடுகின்றன.

தொகுதிக்கு அப்பாற்பட்டு மாநிலக்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், சென்னையைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் சண்முகம், சம்பத் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படலாம் என்கிறார்கள்.


இதையும் வாசிக்கலாமே...

திமுக எம்எல்ஏ-வின் சேலையில் பற்றிய தீ... குஷ்பு படத்தை கொளுத்திய போது விபரீதம்!

மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!

x