எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தங்கள் அணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட உட் கட்சி பிரச்சினையால், அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதால் சட்டரீதியாகவும் கட்சி, சின்னம் ஆகியவை அவரிடம் சென்றுள்ளது. இதை நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவில் பிரிந்துள்ள பலரையும் ஒன்றாக சேர்க்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. அதேபோல பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள அதிமுகவை மீண்டும் தங்கள் கூட்டணிக்கு கொண்டு வரவும் பாஜக முயற்சி செய்து வந்தது.
இந்த இரண்டு முயற்சிகளும் பலனளிக்காத நிலையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பாஜக ஆதரவாக இருந்து வருகிறது. பாஜக அவருக்கு ஆதரவாக செயல்படுவதால் தங்கள் அணியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி என்பவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என்று கொடுத்துள்ள மனுவின் மீது பதில் அளிக்குமாறு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று அதிகாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரனுடன் பாஜக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தைநேற்று நள்ளிரவு முதல் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிறகு இன்று அதிகாலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், , தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரப்படும் என்பதால் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசியல் களம் உற்று நோக்குகிறது.
இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடுவோம் என்று அதிமுகவை மிரட்டி, பாஜக கூட்டணிக்கு அழைப்பதாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நாளை நடைபெற உள்ளது.