தருமபுரி: கழுதைகள் மூலம் பொருட்களை கொண்டுசென்ற குடும்பத்தினர் வேலைவாய்ப்பு கோரி மனு


தருமபுரி மாவட்டம் கோட்டூர் மலைக்கு கழுதைகளின் மீது எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள். (கோப்புப் படம்)

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கோட்டூர் மலைக்கு நீண்ட காலமாக கழுதைகள் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று வந்த குடும்பத்தினர் வேலைவாய்ப்பு மற்றும் மனை பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா உள்ளிட்ட சிலர் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘பாலக்கோடு அருகே கரகூரையொட்டி கோட்டூர் மலை அமைந்துள்ளது. இந்த மலைக் கிராமத்துக்கு வாகன போக்குவரத்துக்கு ஏற்ற சாலை வசதி இல்லை. எனவே, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த மலைக் கிராமத்துக்கு அரசு உத்தரவின் பேரில் கழுதைகள் மூலம் ரேஷன் கடைக்குத் தேவையான பொருட்களை ஏற்றிச் செல்லும் தொழில் செய்து வந்தோம்.

இதுதவிர, தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் கழுதைகள் மீது ஏற்றிச் சென்று மீண்டும் மலையடிவாரம் எடுத்து வரும் பணியையும் செய்தோம். மேலும், மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் விளைபொருட்களை மலையடிவாரம் வரை ஏற்றிச் சென்றுள்ளோம்.

இந்நிலையில், அண்மையில் கோட்டூர் மலைக்கு டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொருட்களை கழுதைகள் மீது ஏற்றிச் செல்லும் நடைமுறை கைவிடப்பட்டு டிராக்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. சாலை வசதியில்லாத மலைக் கிராமத்துக்கு சாலை ஏற்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

அதேநேரம், மிக நீண்ட ஆண்டுகளாக கழுதைகள் மூலம் மலைக் கிராமத்துக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் தொழிலையே எங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தோம். பிழைப்பு தேடி பெரு நகரங்களுக்கு செல்லாமல் கிராம மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பணியில் ஈடுபட்டோம்.

இருப்பினும், தற்போது வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் இழந்து சிரமப்படுகிறோம். எனவே, கழுதைகள் மூலம் மலைக் கிராமத்துக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும். மேலும், எங்கள் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய உதவும் வகையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

x