பம்மல், அனகாபுத்தூர் சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்: தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்

சென்னை: பம்மல், அனகாபுத்தூர் சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரி தேமுதிக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதிகளைச் சேர்ந்த தேமுதிக கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என்று 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பம்மல், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளால் பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் பிரதான சாலைகளான பம்மல், அனகாபுத்தூர் சாலைகள் கடுமையாக சேதம் அடைந்து வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது.

இதனால் இச்சாலையில் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சாலையில் பதிந்து போக்குவரத்து தடைபடுகிறது. சேதமடைந்த சாலையை காரணம் காட்டி இதுவரை இச்சாலையில் இயக்கப்பட்டு வந்த ஒரு சில அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தினமும் இச்சாலை வழியாக அரசுப் பேருந்துகளில் வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த சாலைகள் மிகவும் குறுகிய சாலைகளாக இருக்கும் நிலையில், அதனை அகலப்படுத்தி, தங்கு தடையற்ற போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், தற்போது மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், இச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. எனவே இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறை மற்றும் அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள் சார்பிலும், தேமுதிக கட்சி சார்பிலும் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து இன்று தேமுதிக கட்சி சார்பில் அனகாபுத்தூர் அரசு நூலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனகாபுத்தூர் பகுதி நகரச் செயலாளர் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதிகளைச் சேர்ந்த தேமுதிக கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என்று 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

x