அரியலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2ஏ தேர்வுகளை 6,734 பேர் எழுதி வருகின்றனர்!


தேர்வு எழுதும் நபர்கள்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2ஏ தேர்வுகளை 6,734 பேர் எழுதி வருகின்றனர். இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை அலுவலர்கள், 8 இயங்கு குழுக்கள், 29 ஆய்வு அலுவலர்கள், 29 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி - 2 மற்றும் தொகுதி - 2ஏ) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் இன்று (செப்.14) காலை 9.30 மணிக்கு அரியலூர், உடையார்பாளையம் ஆகிய 2 வட்டங்களிலும் 29 தேர்வு கூடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுக்கு 8,761 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அதில், 6,734தேர்வர்கள் இன்று தேர்வு எழுதி வருகின்றனர். 2,027 நபர்கள் தோ்வெழுதவரவில்லை. இந்த தேர்வுகள் அரியலூர் வட்டத்தில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தூய மேரி உயர்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் குளோபல் மெட்ரிக் பள்ளி,கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கருப்பூர் விநாயகா கல்வியியல் கல்லூரி, காத்தான்குடிகாடு அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி, இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் சீனியர் செகன்டரி பள்ளி என 15 தேர்வு மையங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேலணிக்குழி, த.பொட்டகொல்லை அரசு மேல்நிலைப்பள்ளிகள், தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி ராமசாமி கலை மற்றும் பொறியியல் கல்லூரி, உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணகெதி கவுதம புத்தர் மேல்நிலைப்பள்ளி, நடுவலூர் பாரத மாத ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி என 14 தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதனிடையே அரியலூர் அரசு கலைக்கல்லூரி, தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் சீனியர் செகன்டரி மையங்களில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தேர்வு கூடங்களுக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு எழுதுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

x