சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின்: செய்தியாளர் சந்திப்பு முழு விபரம்!


சென்னை: அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.7618 கோடி மதிப்பில் 11,516 பேருக்கு வேலையளிக்கும் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பயணம் வெற்றிகரமாகவும், சாதனைக்குரியதாகவும் இருந்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக.27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ மாகாணங்களில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்தார். இந்த பயணத்தில் 18 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரண்டு மாகாணங்களிலும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழர்களை சந்தித்து உரையாடினார்.

இதையடுத்து, கடந்த செப்,.12ம்தேதி பயணத்தை முடித்துக் கொண்டு, துபாய் வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் முதல்வரை, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ராசா உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமெரிக்காவில் அரசு முறை பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ளேன். இது வெற்றிகரமான, சாதனைக்குரிய பயணமாக அமைந்துள்ளது. தனிப்பட்ட எனக்கல்ல,. தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்துள்ளது.

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியாக, கடந்த ஆக.28-ம்தேதி அமெரிக்கா சென்றேன். செப்.12 வரை அங்கு இருந்துள்ளேன். இந்த 14 நாட்களும் மிகப்பெயிய பயனுள்ளதாக அமைந்தள்ளது.உலகின் புகழ் பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன்.இதில், 18 நிறுவனங்கள், பார்ச்சூன் 500 நிறுவனங்களுடன் இந்த சந்திப்பின் போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடன் ஒப்ந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த 19 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7618 கோடி முதலீடு வந்துள்ளது. இதன் மூலம் 11516 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த ஆக.29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் நிறுவன ங்கள், நிறுவன தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணியில் தமிழக அரசுடன் பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இன்னும் பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வருங்காலத்தில் வர விருப்பம் தெரிவித்துள்ளன.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தமாதிரி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் செயல்பட்டு, தவிர்க்க இயலாத காரணம் மற்றும் சில சூழல்களால் உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், எங்கள் வேண்டுகோளை ஏற்று சென்னை மறைமலை நகர் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளது. இரண்டு நாட்கள் முன் அந்த நிறுவனத்தினர், நாங்கள் கமிட்டி அமைத்து உறுப்பினர்களுடன் பேசி அதன்பின் சொல்கிறோம் என்றனர்.

அதன்பின், நாங்கள் அதிக விருப்பம் தெரிவித்து, எல்லா வசதிகளையும் செய்து தருவதாக நம்பிக்கை அளித்தோம். அதை ஏற்று 2 நாட்களில் மகிழ்ச்சியான செய்தியை அனுப்புவதாக கூறினர். நாங்கள் சிகாகோவில் விமானத்தில் இருந்த போது, அறிவித்துவிட்டதாக செய்தி வந்த்து. தமிழகம் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், இந்த முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்று, அவர்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான எல்லா உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

நான் முதல்வன் திட்டம் மூலமாக தமிழக இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளித்து அதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூகுள் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆட்டோ டெஸ்க் நிறுவனத்துடன் தமிழக இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும், குறுசிறு நடுத்த நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்களிடையே தொழில் துறை சுற்றுச்சூழல் போட்டித்தன்மையை உருவாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்க வணிக உகந்த சூழல் நிலவுவது மட்டுமின்றி, உலக முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.31ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலும், செப்.7ம் தேதி சிகாகோவிலும் தமிழ் கூட்டமைப்பு, தமிழ்ச்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றினேன்.

இது தமிழகத்தை இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அமெரிக்க தமிழர்களுக்கும், ஒப்பந்தங்கள் செய்த நிறுவனங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

x