HBD UDAYANIDHI: ஒத்தக் கல்லு செங்கல்லு... உதயநிதியின் வெற்றிக் கல்லு!


ஒற்றை செங்கல்லுடன் உதயநிதி

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் புகழ் வந்து சேரும் என்று சொல்வது உண்மைதான். பலரும் பலவிதமான சாதனைகளை செய்து புகழடைந்த நேரத்தில் ஒரே ஒரு செங்கல்லை தூக்கிக்காட்டி அதன் மூலம் தமிழகம் முழுவதும் பெரும் புகழ் அடைந்தார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின்

கடந்த 2021 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதியின் செங்கல் பிரச்சாரம் மிக முக்கியமானதாக மாறியது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன் சரி, அங்கு கட்டிடம் கூட கட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட ஒற்றை செங்கல்லை கையில் எடுத்து பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த பிரச்சார யுத்தி மக்களிடையே பேசுபொருளானது.

தனது பிரச்சாரத்தில் "மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. அதை கையோடு எடுத்து வந்துட்டேன் என கூறி எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை செல்லும் இடங்களில் எல்லாம் காண்பித்தார். அதிமுகவையும் பாஜகவையும் இதைவிட மோசமாக யாரும் விமர்சிக்க முடியாதபடி செங்கல்லை காட்டி உதயநிதி பிரச்சாரம் செய்தார்.

தந்தையிடம் எய்ம்ஸ் செங்கல் வழங்கும் உதயநிதி

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டியதோடு சரி, ஒரு அடி உயர கட்டுமானம் கூட நடக்கவில்லை என்பதுதான் உதயநிதியின் வாதம். அவரின் இந்தப் பிரச்சாரம் மக்களிடம் நன்றாகவே எடுபட்டது. இதனால் கடுப்பான பாஜக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செங்கல்லை திருடிவிட்டதாக உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ததும் நடந்தது. தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. அதையடுத்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என மக்களிடம் காட்டிய செங்கல்லை, ஸ்டாலினுக்கு தேர்தல் வெற்றியின் பரிசாக உதயநிதி வழங்கினார். மொத்தத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு உதயநிதியின் செங்கல் பிரச்சாரம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

x