தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடியில், 2,781 கி.மீ.க்கு 71 சாலைகள்: கும்பகோணத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்


கும்பகோணம்: தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 2018-ல் தொடங்கியது. தஞ்சாவூர்- சோழபுரம் வரை47.84 கி.மீ, கும்பகோணம் சோழபுரம்- சேத்தியாதோப்பு வரை 50.48 கி.மீ,சேத்தியாதோப்பு- விக்கிரவாண்டி வரை 65.96 கி.மீ என 3 பிரிவுகளாகமொத்தம் 164.28 கி.மீ. தொலைவுக்குஇந்த சாலைப் பணிகள் 3 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

இதில், தஞ்சாவூர்- சோழபுரம், சோழபுரம் - சேத்தியாதோப்பு வரையிலான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இப்பணிகளை ஆய்வு செய்தற்காக மத்தியநெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கும்பகோணம் வந்தார். தொடர்ந்து, கும்பகோணம் தாராசுரத்தில் இருந்து அசூர் வரை 3 கி.மீ தொலைவுக்கு காரில் சென்று நான்கு வழிச்சாலையை ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மூப்பக்கோயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த,சாலை வரைபடத்தை பார்வையிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பல தடைகளைத் தாண்டி தஞ்சாவூர் முதல் சேத்தியாதோப்பு வரை இந்த சாலை மிகவும்தரமாக அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல,விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு சாலை அமைக்கும் பணி தாமதமானதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும். தற்போது, தேசிய நெடுஞ்சாலைமூலம் தமிழகத்தில் கோவை - சத்தியமங்கலம், தூத்துக்குடி- கன்னியாகுமரி, ராமநாதபுரம் - ராமேசுவரம்,ராமேசுவரம்- அரிச்சல்முனை, மதுரை- ராமேசுவரம், மங்களூர்-விழுப் புரம், மதுரை- தொண்டி, சேலம்- வாணியம்பாடி, மதுரை- தேனி என727 கி.மீ. தொலைவுக்கு ரூ.20 ஆயிரம் கோடியில் 10 புதிய நான்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்துக்கு பாராட்டு: தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடியில், 2,781 கி.மீ தொலைவுக்கு 71 சாலைகள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. மத்தியபாஜக ஆட்சியில் 2014-ம் ஆண்டுமுதல் இதுவரை தமிழகத்தில் ரூ.2 லட்சம் கோடியில் 451 சாலைத்திட்டங்கள் 9,300 கி.மீ.தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளன. நீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தமிழகம் எப்போதும் சிறந்து விளங்குகிறது என்றார்.

x