கோவை ஹோட்டல் உரிமையாளர் தாமாக முன்வந்து மன்னிப்பு கோரினார்: வானதி சீனிவாசன் விளக்கம்


கோவை: ‘‘மத்திய நிதியமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடந்தசம்பவம் தொடர்பாக, ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், தாமாக போனில் அழைத்து அனுமதி பெற்று அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். யாரும் வற்புறுத்தவில்லை. என, வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை மாவட்டபாஜக அலுவலகத்தில் பாஜக தேசியமகளிரணி தலைவரும் கோவைதெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: கோவை உட்பட கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் ஹோட்டல் உரிமை யாளர் சீனிவாசன் ஒரு கருத்தை பதிவுசெய்தார். நான் அவர் ஹோட்டலுக்குதினமும் செல்வேன், சண்டையிடுவேன் என கூறினார். நான் ஜிலேபி சாப்பிட்டதும் இல்லை, அவருடன் சண்டையிட்டதும் இல்லை. நான் நினைத்திருந்தால் அப்போதே பதில் கூறியிருக்கலாம். ஆனால் நாகரிகம் கருதி அமைதி காத்தேன். நேற்று முன்தினம் காலை, என்னைபோனில் அழைத்து,‘‘அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என சீனிவாசன்கேட்டார். ஹோட்டலில் மதிய உணவு முடித்த பின் 2.30 மணியளவில் நிதிஅமைச்சரை சந்தித்து, ‘‘நிகழ்ச்சியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன்.வேறு விதமாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே எனது செயலுக்குவருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறினார்.

அவரிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ஜிஎஸ்டி குறித்து என்ன கருத்துவேண்டுமானாலும் கூறுங்கள், உங்கள்எம்எல்ஏ மற்றும் எந்த ஒரு வாடிக்கையாளர் என்ன உணவு உட்கொண்டார் என்பதை பொது இடத்தில் கூறலாமா? இந்நிகழ்வால் எங்கள் கட்சியினருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது’’ என்றார். அரசியல் என்பது போராட்டம் நிறைந்தபாதை. பெண்களுக்கு சமவாய்ப்பு,மரியாதை உள்ளதா என்றால் இல்லை.ஆண் அரசியல்வாதியாக இருந்தால் இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்குமா?

நான் உட்பட கனிமொழி, ஜோதிமணிஎன யாராக இருந்தாலும் பெண் அரசியல்வாதியாக உள்ளதால் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் சமுதாயத்தில் உள்ள மனப்போக்கை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை வருத்தம்: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் வலைதளப் பதிவில் ‘கோவை ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சரை ஹோட்டலில் சந்தித்தபோது நடந்த கலந்துரையாடல் நிகழ்வு வெளியானது குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வணிகத்தில் தூண் போன்றவர் சீனிவாசன். மாநில - தேசியபொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்த நிகழ்வை இத்தோடு முடித்துகொள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்‘ என்று தெரிவித்துள்ளார்

x