பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு எந்தெந்த சாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு திருத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்ததாக ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி . கர்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது.
இந்தநிலையில், இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது பேசுபொருளாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதனை இறுகப்பற்றிக் கொண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முழங்கும் ராகுல்காந்தி, ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் இதனை பிரதானமாக முன்வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்கின்றன. பாமக உள்ளிட்ட கட்சிகள் இதுகுறித்த கோரிக்கைகளை தொடர்ந்து எழுப்பிவருகிறது. ஆனால் தமிழக முதல்வரோ, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பீகார், கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகள் செய்யும்போது தமிழ்நாட்டிலும் அதுபோன்ற கணக்கெடுப்பை மாநில அரசு செய்ய வேண்டியது தானே... அதற்கு திமுகவுக்கு என்ன தயக்கம்? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
கணக்கெடுப்பு நடத்தத் தயங்குவதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்பாக மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முயற்சிகளை திமுக அரசு தடுத்தது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரி அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள பி.வி.வேங்கடகிருஷ்ணன் ஆணையம் 1988 டிசம்பர் 12-ல் அமைக்கப்பட்டது. ஆனால், 1989-ல் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ஆணையத்தைக் கலைத்தது திமுக.
அடுத்ததாக கடந்த 2010 அக்டோபரில் 45 சமுதாயத் தலைவர்கள் சேர்ந்து அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினோம். அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் எம்.எஸ். ஜனார்த்தனத்தை வைத்து இதுகுறித்து பரிசீலிக்கச் சொல்வதாகச் சொன்னார். ஆனால் அதையும் செய்யவில்லை.
அதிமுக அரசு 2020 ம் ஆண்டு டிசம்பரில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதற்குப் பிறகு வந்த திமுக அரசு அந்த ஆணையத்தின் காலக்கெடுவை நீட்டிக்காததால், ஆணையம் கலைக்கப்பட்டது. இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பை தடுத்தது" என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இப்போது கிட்டத்தட்ட பெரும்பாலான பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆகவே, எந்த சாதியினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு தேவை. 2008 ம் ஆண்டின் புள்ளிவிவர சேகரிப்பு சட்டம் ஒரு மாநில அரசு தனக்குத் தேவையான எந்தத் தரவையும் சேகரிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதன் அடிப்படையில் சாதி ரீதியான கணக்கெடுப்பையும் ஒவ்வொரு சாதியிலும் கல்வி ரீதியான புள்ளிவிவரங்கள், அவர்களது பணி நிலைமை ஆகியவற்றையும் சேகரிக்க வேண்டும் என்கிறார்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பவர்கள்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மற்றும் அவர்களது நிலை குறித்து ஆராய்வதற்காக, தமிழ்நாட்டில் இரண்டு முறை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1969ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் ஓராண்டு காலத்தில் தனது அறிக்கையை அளித்தது. இது 1931ம் ஆண்டின் மத்திய அரசின் புள்ளிவிவரங்களை பயன்படுத்தியே பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையை இறுதிசெய்தது.
இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜே.ஏ. அம்பாசங்கர் தலைமையில் 1982 டிசம்பரில் அமைக்கப்பட்டது. இது 1985 ல் தனது பரிந்துரைகளை அளித்தது. இந்த ஆணையம், மாதிரி கணக்கீடு முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி பரிந்துரைகளை அளித்தது. இதற்குப் பிறகு, 1993 ல் வழங்கப்பட்ட ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நிரந்தரமாக அமைக்கப்பட்டு, உறுப்பினர்கள், தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக தயங்குவது ஏன் என்பது குறித்து திமுக செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணனிடம் பேசினோம். "திமுகவுக்கு எந்த தயக்கமும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கமும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பணி. மத்திய பட்டியலில்தான் அது உள்ளது. அதைத்தாண்டி மாநில அரசு செய்ய வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் அனுமதியோ அல்லது நாடாளுமன்றத்தின் அனுமதியோ வேண்டும். இது எதுவும் கிடைக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.
பீகாரை பொறுத்தவரை தங்கள் மாநிலத்தில் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற ஆய்வின் விவரத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இதை வைத்து எதுவும் செய்ய முடியாது. அதுமட்டுமில்லாமல் அங்கு இதுவரை ஐம்பது சதவீதம் தான் இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது அதை 75 சதவீதமாக உயர்த்தப் போகிறார்கள். ஆனால், நம் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது தமிழ்நாட்டில் தான்.
சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு செய்வதால் எந்த பயனும் இல்லை. அதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அதன் அடிப்படையில் எதையும் செய்ய முடியாது என்ற நிலையில், அதற்காக அவ்வளவு செலவழித்து ஒரு நடவடிக்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? இது மத்திய அரசின் வேலை. அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கூடுதலாக, என்ன சாதி என்பதை மட்டும் கேட்டு கணக்கெடுத்தால் முடிந்துவிட்டது” என்றார் அவர்.
திமுக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வராததற்கு பலமான காரணம் இருக்கிறது என்கிறார்கள். கணக்கெடுப்பு நடந்த பின்னர் அதன் விவரங்களை முன்வைத்து சாதிச் சங்கங்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்களில் ஈடுபடலாம். அது பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து விடலாம். அதை சமாளிப்பது அரசுக்கு பெரும் சவாலாக அமையலாம் என்றெல்லாம் மாநில அரசு அஞ்சுகிறது. மாறாக, மத்திய அரசின் வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதுபோன்ற விவரங்கள் வெளியிடப்பட்டால் அதனால் தங்களுக்கு பெரிதாக எந்தச் சிக்கலும் வராது என்று மாநில அரசு கருகிறது.
ஏற்கெனவே 10.5 சதவிகித உள் இடஒதுக்கீடு அறிவிப்பு தன் மாவட்டங்களில் அதிமுகவுக்கு எத்தகையை பாதிப்பை உண்டாக்கியது என்பதை உணர்ந்திருக்கும் திமுக அரசு, தானும் வலியப்போய் அதுபோன்றதொரு சிக்கலுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பாததாலேயே சாதிவாரி கணக்கெடுப்பை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள்!