பாஜக ‘மன்னிப்பு’ சர்ச்சை முதல் ஜாமீனில் கேஜ்ரிவால் விடுதலை வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 


நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோரிய உணவக உரிமையாளர்: தமிழகம் வருகை தந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாக பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடலையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை கொடிசியா அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசினார்.

அப்போது, “உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு இருக்கிறது. ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள்” என்பது குறித்து கிண்டலும் ஆதங்கமும் கலந்து சீனிவாசன் சில நிமிடங்கள் பேசினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரிய வீடியோ ஒன்று வேகமாக பரவியதால் சர்ச்சை வலுத்தது.

மன்னிப்புக் கோரிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: இந்த சர்ச்சை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன் விளக்கம்: “அந்த ஹோட்டல் உரிமையாளரே தொலைபேசியில் அழைத்துக் கேட்டுக் கொண்டார். ‘நான் பேசிய விஷயம் தவறுதான். உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். இதெல்லாம் சமூக ஊடகங்களில் வேறு மாதிரியாக சென்றுவிட்டது. மனது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் என்னிடம் அந்த உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டார்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு: “மக்களை சந்திக்காமலேயே, வாக்குகளை பெறாமலேயே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்று மத்திய அமைச்சராக நீண்டகாலமாக நீடித்து வருகிற நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்குக்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

மேலும், ‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து சனிக்கிழமை கோவை ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கண்டனம்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், நமது மக்கள் பணியாளர்களிடம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை குறித்து ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ஆனால் இந்த அரசு அவரது கோரிக்கையை ஆணவத்தோடு அணுகியுள்ளது. அவரை அவமரியாதை செய்துள்ளது. ஆனால், அவரைப் போன்ற சிறு முதலாளியாக இல்லாமல் பெரும் பணக்காரராக இருந்து சட்ட விதிகளை மாற்றக் கோரியிருந்தால், தேசிய உடைமைகளையே சொந்தம் கொண்டாட விரும்பியிருந்தால் அவர்களுக்கு மோடி சிவப்புக் கம்பளம் விரித்திருப்பார்.

நமது தொழில்துறையினர் ஏற்கெனவே பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடவே கடுமையான வங்கி நடைமுறைகளும், வரி விதிப்புகளும், ஜிஎஸ்டியும் அவர்களை வாட்டுகிறது. இவை எல்லாம் பத்தாது என அவர்கள் இப்படி அவமதிக்கப்படுகிறார்கள். அதிகாரத்தில் இருப்போரின் நான் எனும் அகந்தை மேலோங்கும் போது அவமானப்படுத்துதல் தான் அவர்களின் எதிர்வினையாக அமைகிறது.

சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் பல ஆண்டுகளாக வரி சிக்கல் உள்ளிட்டவற்றில் இருந்து நிவாரணம் கோரி வருகின்றனர். ஆனால், இந்த ஆணவ அரசு அவர்களுக்கு செவிசாய்த்திருந்தால் எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி விதிப்பு முறையைக் கொண்டுவந்து லட்சக்கணக்கான தொழில்முனைவோரின் பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை: குரூப் 2 தேர்வை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்துவிதமான பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செப்.24-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் - தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய, சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் செப்டம்பர் 29-ல் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கொல்கத்தா மருத்துவர்கள் கடிதம்: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 6 மாதங்களுக்கு பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

விடுதலையான கேஜ்ரிவால் முழக்கம்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சனிக்கிழமை மாலை திஹார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, “என் மன உறுதி 100 மடங்கு உயர்ந்துள்ளது. என் பலம் 100 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டை பலவீனப்படுத்தும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்" என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.

x