தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று விருப்பக் கடிதம்


சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பையடுத்து, தமிழகத்தில் மீண்டும் வாகன உற்பத்தியை தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை தமிழக அரசிடம் ஃபோர்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் குஜராத்தின் சன்ந்த் மற்றும் தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் தனது உற்பத்தி மையத்தை நிறுவியிருந்தது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால் கடந்த 2021-ம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், 2022-ல் வெளியேறியது. குஜராத்தில் உள்ள உற்பத்தி மையத்தை டாடா நிறுவனத்துக்கு மாற்றியது. ஆனால், தமிழகத்தில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, தன்வசமே வைத்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றார். அவர் சான்பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்து, கடந்த செப்.2-ம் தேதி சிகாகோவுக்கு பயணித்தார். சிகாகோவில், பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கடந்த செப்.10-ம் தேதி, ஃபோர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே ஹார்ட், துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி, ஃபோர்டு இந்தியா இயக்குநர் ஸ்ரீபாத் பட் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வர் தமிழகத்தில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும், உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார். அவர் சென்னை வரும் முன்பாகவே, ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தி பிரிவை மீண்டும் தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை தமிழக அரசிடம் இன்று (செப்.13) அளித்துள்ளது. இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்தின் ஐஎம்ஜி தலைவர் கே ஹார்ட் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘ஃபோர்டு நிறுவனம் மீண்டும் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து ஏற்றுமதிக்கான உற்பத்தியை தொடங்குவதற்கு விரும்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளது. அமெரிக்கா வந்துள்ள தமிழக முதல்வருடனான கடந்த வார சந்திப்பு மட்டுமின்றி, தமிழக அரசுடன் பலமுறை பேசியதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொடர் ஒத்துழைப்பை பாராட்டும் நேரத்தில், சென்னை தொழிற்சாலையில் பல்வேறு விதமான தொழிற்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் சென்னையில் எங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளோம். எங்களது உலகளாவிய ஃபோர்டு வர்த்தக குழுவில் ஏற்கெனவே 12 ஆயிரம் பேர் பணியில் உள்ள நிலையில், மேலும், 2,500 முதல் 3,000 பேர் வரை அடுத்த சில ஆண்டுகளில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

x