அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும்: போக்குவரத்துத் துறைச் செயலர் நம்பிக்கை


சென்னை: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும் என போக்குவரத்து துறைச் செயலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கருவியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, க்யூ ஆர் குறியீடு உள்ளிட்டவை மூலம் பணம் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு டிஜிட்டல் முறையில் மாதந்தோறும் அதிக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் மூன்று நடத்துநர்களுக்கு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் பாராட்டு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் சிறப்பாக செயல்பட்ட மூன்று பேரை மேலாண் இயக்குநர் கவுரவிக்கும் புகைப்படம் போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.

இதைச் சுட்டிக்காட்டி போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, "டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது அரசு, பயணி என இரு தரப்பினருக்குமே நன்மை பயக்கும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பயணச்சீட்டுக் கருவி வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்று பணீந்திர ரெட்டி கூறியுள்ளார்.

x