அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தாமே முன்வந்து மன்னிப்புக் கோரினார்: வானதி சீனிவாசன் அதிரடி


கோவை: “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் தாமாக என்னை போனில் அழைத்து அனுமதி பெற்று அமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அவரை யாரும் வற்புறுத்தவில்லை” என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு, 18 வகையான தொழில் செய்யக் கூடிய கைவினை கலைஞர்களுக்கு ‘விஸ்வகர்மா’ என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் குறித்து ஆய்வு செய்த பின் தினமும் ரூ.500 கொடுத்து தொழில் பயிற்சி வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி ரூ.15 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கி, மூலதனம் நிதியுதவி ரூ.50 ஆயிரம் முதல் சொத்து பிணையின்றி வழங்கு கின்றனர். தமிழகத்தில் மீன் படகு கட்டுபவர்கள், சலூன் கடை வைத்திருப்பவர்கள் என பலவிதமான தொழில் முனைவோரை பயன் பெறவிடாமல் தமிழக அரசு வேண்டுமென்றே இத்திட்டத்தை புறக்கணித்து வருகிறது.

கோவை உட்பட கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண டெல்லியில் உள்ள பல்வேறு பிரிவு அதிகாரிகள் கோவைக்கு வந்து குறைகளை கேட்டறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை மேற்கொண்டார். தொழில் முனைவோருடன் கலந்துரையாடினார்.

மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர் சீனிவாசன் ஒரு கருத்தை பதிவு செய்தார். நான், அவர் ஓட்டலுக்கு தினமும் செல்வேன், சண்டையிடுவேன் எனக் கூறினார். அவருடைய ஓட்டலில் நான் ஜிலேபி உட்கொண்டதும் இல்லை, அவருடன் சண்டையிட்டதும் இல்லை. நான் நினைத்திருந்தால் அந்த இடத்திலேயே அவருக்கு பதில் கூறியிருக்கலாம். ஆனால் நாகரிகம் கருதி அமைதி காத்தேன்.

இந்த நிலையில், நேற்று காலை முதல் என்னை போனில் அழைத்து அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கேட்டார் சீனிவாசன். ஓட்டலில் மதிய உணவு முடித்த பின் 2.30 மணியளவில் அமைச்சரைச் சந்தித்த அவர், "நிகழ்ச்சியில் தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டேன். நான் பேசியது வேறுவிதமாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே, எனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சொன்னதுடன், தான் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர் எனக் கூறினார்.

அவரிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஜிஎஸ்டி குறித்து என்ன கருத்து வேண்டுமானாலும் கூறுங்கள். ஆனால், தங்கள் எம்எல்ஏ ஒரு வாடிக்கையாளராக தங்களது ஓட்டலில் என்ன உணவு உட்கொண்டார் என்பதை பொது இடத்தில் கூறலாமா?” எனக் கேட்டார்.

இந்நிகழ்வால் தங்கள் கட்சியினருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. அரசியல் என்பது போராட்டம் நிறைந்த பாதை. அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பு, மரியாதை உள்ளதா என்றால் இல்லை என்று கூறுவேன். அதற்காக பெண் அரசியல் வாதி என்பதால் தன் மீது இரக்கம் காட்டுங்கள், சலுகை கொடுங்கள் எனக் கேட்க மாட்டேன். ஆண் அரசியல் வாதியாக இருந்தால் இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்குமா?

தான் உள்ளிட்ட கனிமொழி, ஜோதிமணி யாராக இருந்தாலும் பெண் அரசியல் வாதியாக உள்ளதால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் சமுதாயத்தில் உள்ள மனப்போக்கை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

x