பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 15-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில் தற்போது அவரது பயணத்திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தென் மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி இருக்கிறது. அதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தென் மாநிலங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் அவர் தமிழகம் வந்திருந்தார். 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து 28-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அத்துடன் நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டதுடன், 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியையும் அப்போது அவர் தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 15-ம் தேதி சேலத்திற்கும், 16- ம் தேதி கன்னியாகுமரிக்கும், 18-ம் தேதி கோவைக்கும் அவர் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணத் தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதிக்கு பதில் மார்ச் 19-ம் தேதியன்று அவர் சேலம் வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் மார்ச் 19-ம் தேதி 5 வது முறையாக வர உள்ளார்.
புதிய தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார்.
புதியதாக இரு தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து மார்ச் 15-ல் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதன் காரணமாகவே பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணம் தேதி மாற்றப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையில் ஏற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவரது பயணம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பாஜகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.