அன்னபூர்ணா விவகாரம்: மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை!


சென்னை: அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளர் சீனிவாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார். அவரது பேச்சு இணையதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வீடியோவை பகிர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். இதனையடுத்து அன்னபூர்வா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் நேற்று வைரலானது. அதில் நிர்மலா சீதாராமன் மற்றும் வானதி சீனிவாசன் சந்தித்த அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ''நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என எழுந்து கைக்கூப்பி மன்னிப்பு கோரியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டிய அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி பாஜக மன்னிப்பு கோர வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியானதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக பாஜக சார்பில் அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் வீடியோவை பகிர்ந்து கொண்டதற்கு எங்கள் கட்சியினர் சார்பில் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அன்னபூர்ணா உணவகங்களின் உரிமைாளரான சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத செயலுக்கு வருத்தம் தெரிவித்தேன்.

அன்னபூர்ணா சீனிவாசன் தமிழ்நாட்டின் தொழில்துறையில் தூணாக இருக்கிறார். மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்பு அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை மரியாதையுடன் இத்துடன் முடித்து வைக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

x