தமிழகத்தில் 1,000 மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் உடனடியாக 1,000 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைத்துமதுக்கடைகளையும் மூடினால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான், மதுக்கடைகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்றுமதுவிலக்குத் துறை அமைச்சர்முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் மீட்க முடியாத அளவுக்கு மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள் என்பதைப்போலவும், மதுக் கடைகளை மூடிவிட்டால் அவர்களால் வாழவே முடியாது என்பதால்தான் மதுக்கடைகளை தொடர்ந்து நடத்துவது போலவும் அமைச்சர் முத்துசாமி பேசியிருக்கிறார்.

திமுகவைச் சேர்ந்த மது ஆலை உரிமையாளர்களின் நலனுக்காக மதுக்கடைகளை நடத்திக் கொண்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மக்களை மீளாக் குடிகாரர்களாக சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது. மது விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டும் தமிழக அரசு, மதுவின் தீமைகள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.4 கோடி மட்டும்தான் ஒதுக்குகிறது.

அண்டை மாநிலத்தில் இருந்து மது கடத்தப்படுவதையும், கள்ளச் சாராயத்தையும் காரணம் காட்டி மது வணிகத்தை தொடரக் கூடாது. எனவே, தமிழகத்தில் உடனடியாக 1,000 மதுக்கடைகளை மூட வேண்டும். தொடர்ந்து, 6 மாதங்களுக்கு தலா 1,000 மதுக்கடைகள் வீதம் மூடி, திமுக ஆட்சி முடிவதற்குள் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுஅன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

x