மிலாடி நபி, தொடர் விடுமுறையையொட்டி 1,515 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு


சென்னை: மிலாடி நபி, தொடர் விடுமுறையையொட்டி, 1,515 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: செப்.14 (சனிக்கிழமை), செப்.15 (ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்தம்), செப்.17 (மிலாடி நபி) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் (செப்.13, 14) சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 955 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 350 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 1,515 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் பயணிக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அதேநேரம், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள்இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்துகள் அபாயம்: சென்னையை பொருத்தவரை கிளாம்பாக்கத்தில் இருந்து நள்ளிரவு 12 முதல் 4 மணி வரை பயணிகளின் பாதுகாப்பு கருதி, மிகக் குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படும். அந்த நேரத்தில் விபத்துகள் ஏற்படும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இரவு 11 மணிக்கு மேல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தன.

தற்போது கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வரும் நேரத்தை கணக்கில் கொண்டு 12 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் தங்களுடைய பயணத்தை 12 மணிக்கு உள்ளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்குவதற்கு ஏற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

x