கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.40 கோடி நிலத்தை ரூ.3 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடும் அரசாணையை எதிர்த்து வழக்கு


சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.3 ஆயிரம் வாடகையில் குத்தகைக்கு விட அனுமதியளிக்கும் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக பசுமை வழிச்சாலையில் ரூ.40 கோடி மதிப்புள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்புக்கு கடந்த2010-ம் ஆண்டு முதல் 29 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் வாடகை என்ற அடிப்படையில் குத்தகைக்கு விட ஒப்புதல் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நியாயமான வாடகை நிர்ணயம் செய்யப்படாததால் கோயிலுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் ஆடிட்டர் ஒருவரை நியமித்து இழப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு கோயிலுக்கு வர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் கோயில் நிலத்தைகுறைந்த வாடகைக்கு விடஒப்புதல் அளித்து சட்டவிரோதமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து கோயில்நிலத்தை மீட்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “இந்த நிலத்தை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே ஆட்சேபங்கள் கோரியபோது கடந்த 2012-ம் ஆண்டு மனுதாரர் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது 12 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தற்போது அந்த நிலத்துக்கு ரூ.4 லட்சம் வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்” என்றார்.

அப்போது மனுதாரரான டி.ஆர்.ரமேஷ், “கடந்த 2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை திரும்பப் பெறக்கோரி கடந்த 2013-ம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த பரிந்துரை மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என குற்றம்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

x