அவிநாசி அருகே குளத்துப்பாளையத்துக்கு அழைத்து வந்து மகாவிஷ்ணுவிடம் போலீஸார் விசாரணை


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசிஅருகேயுள்ள குளத்துப்பாளையத்தில், பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு அலுவலகம் நடத்தி வருகிறார். இங்கு கரோனா காலத்தில் அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. யூ-டியூப் மூலம் பல்வேறு தரப்பினரும் அவரைப் பின் தொடர்ந்ததால், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை,ஆஸ்திரேலியாவில் அலுவலக கிளைகளைத் திறந்தார்.

இந்நிலையில், சென்னையில்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சைக்குள்ளானதால், அவரை சைதாப்பேட்டை போலீஸார் கைதுசெய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரியதன் அடிப்படையில், 3 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து, சைதாப்பேட்டை போலீஸார் அவரை பலத்த பாதுகாப்புடன் நேற்று காலைகுளத்துப்பாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர்.

அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் ஹார்டுடிஸ்க், கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.மேலும், நன்கொடை விவரங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல, அன்னதானத்துக்கான சமையல் பணியாளர்கள் 4 பேர், அலுவலக ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேரிடம் போலீஸார் விசாரித்தனர். தொழில் நகரமான திருப்பூர் அருகே அலுவலகம் அமைத்ததன் பின்னணியில் தொழிலதிபர்கள் யாரும் உள்ளனாரா என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். நேற்று மதியம்3 மணியுடன் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, மகாவிஷ்ணுவை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

கண்டித்து ஆர்ப்பாட்டம்... இதற்கிடையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தி பேசியதாக மகாவிஷ்ணுவைக் கண்டித்து பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

x