தூத்துக்குடி: உடல்நலக்குறைவால் காலமானதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் (76) உடல், அவரது சொந்தஊரான திருச்செந்தூர் அருகேஉள்ள பிச்சிவிளை கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன் கடந்த10-ம் தேதி காலமானார். 2 நாட்கள் சென்னையில் அஞ்சலி செலுத்திய பிறகு நேற்று காலை அவரது சொந்த ஊரான பிச்சிவிளை கிராமத்துக்கு வெள்ளையன் உடல் கொண்டுவரப்பட்டது.
அங்குள்ள மண்டபத்தில் வைக்கப்பட்ட வெள்ளையன் உடலுக்கு, அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி எம்.பி. ராபர்ட் புரூஸ், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், அதிமுகமாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், பாஜக மாவட்டத் தலைவர் ஆர்.சித்ராங்கதன் மற்றும்பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மாலையில் வெள்ளையன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில், வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலைபிச்சுவிளையில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது