அனைவரின் ஒப்புதலுடனே ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுகிறது; தமிழக அரசு பொறுப்புடன் பேச வேண்டும்: நிர்மலா சீதாராமன்


கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார் | படம்: ஜெ.மனோகரன்

கோவை: ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது கமிட்டியில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அமல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழக அரசு பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 7 அம்சங்களில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி தொடர்பாக, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோவையில் ஓட்டல் தொழிலதிபர் ஒருவர் பேசியதைக் கொண்டு,ஜிஎஸ்டிக்கு எதிராகச் செயல்படுவோர் ஆதாயம் தேடி வருகின்றனர். ஜிஎஸ்டியை எளிமையாக்கவும், மக்களுக்கு சுமை ஏற்படாததை உறுதி செய்யவும் தொடர்ந்துநடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து மாநிலப் பிரதிநிதிகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே, வரி விதிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பருத்திக்கான இறக்குமதி வரி 11 சதவீதத்தை ரத்து செய்வது, பம்ப்செட் மீதான வரி குறைப்பு தொடர்பாக தொழில்முனைவோர் அளித்துள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். மொத்த ஜிஎஸ்டி வருவாயில் எந்தெந்த மாநிலங்களுக்கு, எவ்வளவு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பது நிதித்துறை கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில்தான் செயல்படுத்தப்படுகிறது. பாதிக்கப்படும் மாநிலங்கள், நிதித்துறை கமிஷனைத்தான் கேட்க வேண்டும். எனவே, மாநில அரசு பொறுப்புடன் பேச வேண்டும்.

இந்திக்கு எதிராகப் பேசுபவர்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடம் கேட்டு, எம்.பி.க்கள் மூலம் என்னை நாடுகின்றனர். இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் இருந்து, விதிமுறைகளை மீறி அபராதம் வசூலித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மணிப்பூர் நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் தற்போது பேசுகின்றனர். கடந்த காலங்களில் மிசோரம்மாநிலத்தில் நடந்த வன்முறையின்போது, ராணுவ வீரர்களைக் கொண்டு மக்களை சுட்டுக் கொன்றது காங்கிரஸ் அரசுதான். தற்போதுமத்திய அமைச்சர்கள் மணிப்பூருக்கு நேரில் சென்று முகாமிட்டு, கலவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.21 ஆயிரம் கோடிகடனுதவியை மத்திய அரசு பெற்றுத் தந்துள்ள நிலையில், அதில் ரூ.5 ஆயிரம் கோடியை மட்டுமே தமிழகஅரசு பயன்படுத்தியுள்ளது. தன்மீதான கேள்விகள் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முற்பட்டால், அவரை எதிர்க்கட்சியினர் பேச விடாமல் செய்து, கூச்சலிட்டபடி வெளிநடப்புசெய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிராகப் பேசி வருவது குறித்து, கூட்டணியில் உள்ள திமுகவினர் கேள்வி கேட்க மறுப்பது ஏன்? அவரது பேச்சை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறதா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x